பத்து வருடமாக காதலித்து வந்த நிலையில் ஹாலிவுட் நடிகை – இசைக்கலைஞர் உறவு முறிவு

நியூயார்க்: பிரபல நடிகை கோர்ட்னி காக்ஸ் மற்றும் இசைக்கலைஞர் ஜானி மெக்டெய்டு தங்களின் 10 ஆண்டுகால காதலை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். பிரபல ஹாலிவுட் நடிகை கோர்ட்னி காக்ஸ் (60) மற்றும் ‘ஸ்னோ பேட்ரோல்’ குழுவின் இசைக்கலைஞர் ஜானி மெக்டெய்டு (48) ஆகியோர் கடந்த 2013ம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட இந்த ஜோடி, 2015ம் ஆண்டு சிறிய மனக்கசப்பால் பிரிந்தனர். பின்னர் 2016ம் ஆண்டு மீண்டும் இணைந்த இவர்கள், லண்டன் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளிலும் மாறி மாறி வசித்து வந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இவர்களது நீண்டகால காதல் பயணம், தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே இருவரும் தனித்தனியாக வசித்து வந்த நிலையில், தற்போது சுமூகமாகப் பிரிய முடிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு விதமான வாழ்க்கை முறையை விரும்புவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜானியின் நண்பர் ஒருவர் கூறுகையில், ‘ஜானி எப்போதும் கோர்ட்னி பற்றி மிக உயர்வாகவே பேசுவார். அவர்களுக்குள் ஆழமான உறவு இருந்தது. தற்போது இருவரும் ஒருமித்த கருத்துடன் பிரிந்துள்ளனர். இது ஒரு கசப்பான பிரிவு அல்ல, இருவரும் சிறந்த நண்பர்களாகத் தொடர்வார்கள்’ என்று தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாகக் காணப்பட்ட இந்த ஜோடி, தற்போது தங்களின் பிரிவை உறுதி செய்துள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: