மாமல்லபுரம்: மாமல்லபுரம் மீனவர்குப்பம் கடற்கரையில் நேற்று காலை 2 அடி உயரத்துக்கு திடீர் கடலரிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் அச்சமடைந்தனர். மாமல்லபுரத்தில் இருந்து புதிய கல்பாக்கம் மீனவர்குப்பம் பகுதி வரை உள்ள மீனவ குப்பங்களில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது.
இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினமும் கடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு சிறிய படகுகளில் சென்று மீன்பிடித்து வந்து விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை மாமல்லபுரம் மீனவர்குப்பம் உள்ளிட்ட பல்வேறு மீனவ குப்பம் கடற்கரையில் சுமார் 2 அடி உயரத்துக்கு திடீரென கடலரிப்பு ஏற்பட்டது.
இதனால் கடற்கரையையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தங்களது மீன்பிடி படகுகளை மீனவர்கள் வேறொரு இடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று நிறுத்தி வைத்தனர்.இந்த திடீர் கடலரிப்பால் மீனவர்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த திடீர் கடலரிப்பால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
