அச்சரப்பாக்கம்: ‘செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய கம்பெனியில் நிறைய சலுகை என ஆசை வார்த்தை கூறி பாதி விலையில் டிவி, மிக்ஸி, பிரிஜ் உள்ளிட்ட பொருட்கள் கொடுகிறோம்’ எனக்கூறி வந்தவாசி அருகே காரில் வந்த கும்பல் பணம் வசூலித்து பல லட்சம் மோசடி செய்துள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் அளித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பாதூர் கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காரில் வந்த 4 பேர் கும்பல், கிராம மக்களிடம், ‘நாங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து வந்துள்ளோம். அதிக முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு கம்பெனியின் கிளையை, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் தொடங்கிவிட்டோம். இதற்காக ஆபர் வழங்கும் விதமாக நாங்கள் பாதி விலையில் டிவி, பிரிஜ், வாஷிங் மிஷின், கிரைண்டர், மிக்ஸி, உள்ளிட்ட பொருட்களை கொடுக்கிறோம். இதற்கான கூப்பனை ரூ.5000 செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள். இந்த கூப்பனுடன் உங்களுக்கு காஸ் அடுப்பு வழங்கப்படும்’ என கூறி உள்ளனர்.
இதை நம்பி கிராமத்தில் உள்ள 2 பேர் பணம் செலுத்தி கூப்பன் பெற்றுள்ளனர். அவர்களுக்கு கூப்பனுடன் காஸ் அடுப்பை வழங்கி உள்ளனர். இதையடுத்து கிராமத்தில் உள்ள கூலி தொழிலாளர்கள் குப்பம்மாள், பரசுராமன், சேகர், கவுரி, சாந்தி, சுலோச்சனா, அஞ்சலை, சரிதா, ஜெயசீலன், கோமளா, ரேவதி, ராதிகா, உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளனர். இதையடுத்து பணம் வசூலித்த 4 பேர் கும்பல் தற்போது 2 காஸ் அடுப்பு மட்டுமே கொண்டு வந்துள்ளோம். இதனால் கூப்பன் மட்டும் வழங்குகிறோம். உங்களுக்கான பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்போம். அப்போது அடுப்பையும் சேர்த்து தருகிறோம், என கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் மேலும் சிலர் கிராமத்தில் பணம் செலுத்தி பாதி விலையில் பொருட்களை வாங்க முடிவு செய்தனர்.
இதனால் அவர்களது செல்போன் எண்ணை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும், நேற்று முன்தினம் பொருட்களுடன் வருவதாக கூறியவர்கள் கிராமத்திற்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்து கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் நேற்று பணத்தை மீட்டு தரும்படி கீழ்கொடுங்காலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது பணம் செலுத்தியவர்களில் ஒருவர், சரவணன் பாஸ்கர் என்ற நபரின் வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் ரூ.4,990 அனுப்பியதற்கான ஆதாரத்தையும் கொடுத்துள்ளார். இதேபோல் இந்த கும்பல் பல இடங்களில் மக்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. பாதி விலையில் பொருட்களை வழங்குவதாக பணம் வசூலித்து ஏமாற்றப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
