*வாகன ஓட்டிகள் கோரிக்கை
கடையம் : கடையத்திலிருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் சுமார் 10க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் இருப்பதால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து கேளையாப்பிள்ளையூர், வள்ளியம்மாள்புரம், தெற்கு மடத்தூர், வடமலைப்பட்டி, மணல் காட்டனூர், ஐந்தாம் கட்டளை, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆலங்குளம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் பள்ளி, அங்கன்வாடி மற்றும் வளைவு பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வேகத்தடைகளில் பெரும்பாலானவற்றில் பூசப்பட்ட வெள்ளை வர்ணம் அழிந்து போய் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கு வேகத்தடை இருப்பது தெரிவதில்லை.
இதனால் பலர் வேகத்தடையில் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, வேகத்தடைகளை வர்ணம் பூச வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், “குறிப்பாக பள்ளி மற்றும் குழந்தைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் பூசப்பட்ட வெள்ளை அழிந்து காணப்படுகிறது.
இந்த சாலையில் அன்றாடம் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் செல்கின்றன. வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம் அழிந்துள்ளதால் இரவில் வாகனங்களில் வேகமாக செல்லும் போது அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும். மேலும், வேகத்தடைகள் அருகில் போதிய விளக்கு வசதி, ரிப்ளக்ட் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும் என்றனர்.இத்தகைய பிரச்னைகள் பல்வேறு ஊரக சாலைகளிலும் இருப்பதால், மாவட்டம் முழுவதும் உள்ள வேகத்தடைகளுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு தேவை என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
