கரும்பு பயிர் சாகுபடியை ஊக்குவிக்க சொட்டுநீர் பாசனம் அமைத்தால் கூடுதல் மானியம் வழங்கப்படும்

 

கரூர், ஜூன் 26: கரும்பு பயிர் சாகுபடி ஊக்குவிக்க சொட்டுநீர் பாசனம் அமைத்தால் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று வேளாண்மைத்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் 2025 26ம் ஆண்டில் நுண்ணீர் பாசனத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயிருக்குத் தேவையான பாசன நீரின் அளவு மற்றும் மண்ணின் தன்மைக்கேற்பவும், பயிரின் வகைக்கேற்பவும், சொட்டுநீர், தெளிப்புநீர் மற்றும் மழைத் தூவான் போன்றவைகள் அமைத்திட இத்திட்டம் வழிவகை செய்கிறது. பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் (PMKSY – MI) மூலம் விவசாயத்திற்கு குறைந்த நீரில் அதிக மகசூல் மற்றும் அதிக இலாபம் கிடைக்க இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு புதிய மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய பெருமக்கள் தாங்களாகவே நுண்ணீர்ப் பாசனத் திட்டம் பெற, இணையத்தில் பதிவு செய்யவும். அவர்களுக்கு விருப்பமான நுண்ணீர்ப் பாசன நிறுவனங்களைத் தேர்வு செய்து கொள்ளவும். அவற்றின் விலை விபரங்களையும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் முடியும். விவசாயிகள் தங்களது விண்ணப்பம் எந்நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்கவும் வசதி உள்ளது. நுண்ணீர்ப்பாசனத் திட்டத்திற்கு தேவையான முக்கிய ஆவணங்கள்: அலைபேசி எண், விவசாயியின் புகைப்படம், நிலத்தின் சிட்டா மற்றும் அடங்கல், நிலவரை படம் (FMB), கிணறு, போர்வெல் இருப்பதற்கான ஆவணம், குத்தகை நிலத்திற்கான ஆவணம் (7 ஆண்டுகள் வரை) குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கை, சிறு, குறு விவசாயி சான்றிதழ் நுண்ணீர் பாசனத் திட்டம் வெளிப்படை தன்மையுடன் இருப்பதால் கரூர் மாவட்ட விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தினை www.tnhorticulture.in.gov.in/horti/mimis என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

பிரதம மந்திரி நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் பாசன வசதியுள்ள சிறு, குறு விவசாயிகள் 100% மானியத்திலும், இதர விவசாயிகள் 75% மானியத்திலும் தமிழக அரசு வழங்கும் கூடுதல் நிதி உதவியுடன் பங்குபெற்று பயன்பெறலாம். கரும்பு பயிர் சாகுபடியினை ஊக்குவிக்கும் வண்ணம் கரும்பு பயிரில் சொட்டு நீர் பாசனம் அமைத்தால் கூடுதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.

 

Related Stories: