தவெகவை அணைக்கிறேன் என பேசி காங்கிரசை அணைத்து விடாதீர்கள்: ப.சிதம்பரத்திற்கு கவிஞர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம்

சென்னை: திமுக வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக புதிய அமைச்சரவை தடுமாறுகிறதே, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியவில்லையே என்று ப.சிதம்பரத்திடம் கேட்டபோது, 1967ல் திமுகவும் அப்படித்தான் புதியவர்களுடன் சிரமப்பட்டது, என்று மேதாவியாக பதில் சொல்லி இருக்கிறார். தவெகவில் செங்கோட்டையன், ஜே.சி.டி.பிரபாகர் தவிர மற்றவர்கள் சட்டசபை பார்வையாளர் மாடம் கூட செல்லாதவர்கள்.

ஆனால் அண்ணா சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 1952ல் 15 பேரும், 1957ல் 50 பேருமாக 64 பேர் பழைய சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் இருந்தனர். 1967ல் அமைச்சர்கள் அனைவரும் பழைய சட்டமன்ற உறுப்பினர்கள் தான், மொழிப் போராட்டத்தில் பலமுறை, ஆண்டுக்கணக்கில் சிறை சென்றவர்கள், சட்டமன்றத்தில் காங்கிரஸ் அமைச்சர்களை கேள்வி கேட்டு மடக்கியவர்கள் திமுகவும், தவெகவும் ஒன்றுதான் என்பது, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், பால்வாடி தலைமை ஆசிரியரும் ஒன்றுதான் என்பது போல உள்ளது.

அதேபோல், பாஜ தாமரை ஆபரேஷன் என்கிற பெயரில் தேர்தலை சந்திக்காமல் சேர்த்தது. ஆனால் தவெகவில் மக்களை சந்தித்து விட்டு வரச் சொல்லி ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் மக்களை சந்தித்து தானே சேர்க்கிறார்கள் என்கிறார் ப.சிதம்பரம். தவெகவில் சேர்ந்த அமமுக உறுப்பினர் காமராஜை, தவெக ராஜினாமா செய்ய சொன்னதா? இல்லையே, அவர் வாக்கை வாங்கலாமா? மெஜாரிட்டி இல்லாததால் ராஜினாமா செய்கிறார்கள்.

சி.வி.சண்முகம் கூட்டணி ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்காத போது மெஜாரிட்டி இல்லாதவர்கள் அலுவலகத்திற்கு ஜோசப் விஜய் சென்று வாழ்த்து சொன்னது ஏன்?. கர்நாடகத்தில் 2018 தேர்தலில் பாஜவுக்கு மெஜாரிட்டி இல்லாத போது, இதேபோல் தான் காங்கிரசார் ராஜினாமா செய்து தேர்தலை சந்தித்து தான் வென்ற பின் சேர்த்துக் கொண்டார்கள். பாஜவுக்கும், தமிழக வெற்றிக் கழகத்திற்கும் வித்தியாசம் இல்லை. ஆக ஆபரேஷன் தாமரை பாஜ எப்படியோ, அப்படித்தான் தவெக தமிழ்நாட்டில்.

தமிழகத்தில் பொதுத் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஒரே தலித் என்ற பெருமையை பெற்ற விஸ்வநாதன், பள்ளியில் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடினாரே, ராஜினாமா செய்ய சொல்லி காங்கிரஸ் சொல்ல வேண்டும், குறைந்தபட்சம் மன்னிப்பு கூட கேட்கவில்லை. காங்கிரஸ் மட்டுமா தமிழக வெற்றிக் கழகம் பக்கம் சென்றது, விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக்கும் தானே சென்றது என்கிறார் ப.சிதம்பரம். மறுப்பதற்கு இல்லை, திமுக தலைவரே, ஏன் தவெகவை அழைக்காமல் கவர்னர் சதி செய்கிறார், என்றார். மறுப்பதற்கு இல்லை.

விசிக தலைவர் திருமாவளவன் கூட, நாங்கள் தவெகவிற்கு ஆதரவு தரப் போகிறோம் என்று திமுக தலைவரிடம் சொன்னபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் மு.க.ஸ்டாலின் என்று எதிர்பார்த்தேன். நெகிழ்வோடு போய் வாருங்கள் என்று அவர் சொன்னதை கேட்டு வியந்து போனேன், என்றார். தவெகவிற்கு, காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது பிரச்னை இல்லை. திமுக தலைவரிடம் நீங்கள் சொல்லாமல் போனது கூட தவறில்லை. ஆனால், நன்றி கூட சொல்லாமல் போனது ஏன் என்பது தான் கேள்வி.

பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதமும் இதுவரை கடைபிடிக்கப்பட்டது. இதுதான் காங்கிரஸ் ஆட்சியிலும் கடைபிடிக்கப்பட்ட மரபு. இப்போது தவெக ஆட்சியில் அது தூக்கி எறியப்பட்டது. அதை காங்கிரஸ் கட்சி கண்டிக்காதது ஏன், ஒரு கூட்டத்தில் ஆரம்பத்தில் வரவேற்புரை, கடைசியில் நன்றியுரை என்பதுதான் வழக்கம். நன்றியுரை முதலிலும் வரும் கடைசியிலும் வரும் என்றால் எப்படி?.

காங்கிரஸ் உறுப்பினர்களும் தவெக போல மாறிவிட்டார்கள், எச்சரிக்கையாக இருங்கள். திமுகவில் வென்ற அறந்தாங்கி லட்சுமணன் காங்கிரசுடன் திமுக பிரிவு ஏற்பட்டவுடன் திமுகவை விட்டு விலகி ராஜினாமா செய்து விட்டு துணை சபாநாயகர் பதவியில் ஒட்டிக் கொண்டது போல காங்கிரஸ் அமைச்சர் இருவரும் தவெகவில் ஒட்டிக் கொள்ளப் போகிறார்கள்.

விஜய்க்கு யாரேனும் எழுதிக் கொடுத்து, ஒரு வாரம் மனப்பாடம் செய்து, மேடையில் மட்டும் தான் பேசுவார். சட்டசபையில் பேசவே மாட்டார். கர்ஜிப்பது சிங்கத்துக்கு பழக்கம், பிளிறுவது யானைக்கு வழக்கம், சட்டசபையில் மவுனம் காப்பது விஜய்க்கு பழக்கம். வேட்டைக்காரன் படத்தில் விஜய் கூறுவார், நான் ‘சாமி முன்னாடி தான் சாந்தமா பேசுவேன், சாக்கடையின் முன் இல்லை’, என்பார். சட்டசபை அவர் கண்ணுக்கு ‘சாக்கடையா’ என்று ப.சிதம்பரம், விஜய்யிடம் கேட்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: