நியூயார்க்: 23வது பிபா உலக கோப்பை கால்பந்துதொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 48 அணிகள் தலா 4 என 12 குழுவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த போட்டியில் கே பிரிவில் போர்ச்சுக்கல்-உஸ்பெகிஸ்தான் மோதின. முந்தைய ஆட்டத்தில் காங்கோவிடம் டிரா செய்த போர்ச்சுகல், இந்த முறை 66% பந்தை தன் வசம் வைத்துக்கொண்டு முழு ஆதிக்கத்தை செலுத்தியது. 41 வயதான கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 6 மற்றும் 39வது நிமிடத்தில் கோல் அடித்தார். நுனோ மென்டிஸ் ஃப்ரீ கிக் மூலம் 17வது நிமிடத்திலும், ரஃபேல் லியோ 87வதுநிமிடத்திலும் கோல் அடித்தனர். உஸ்பெகிஸ்தான் வீரர் அப்துவோஹித் நெமடோவ் 60வது நிமிடத்தில் ஒன்சைடு கோல் அடித்தார். முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் முதல் வெற்றி பெற்றது.
40 வயதை கடந்தபின்னர் உலக கோப்பையில் ஒரு போட்டியில் 2 கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்தார். மேலும் பங்கேற்ற 6 உலக கோப்பையிலும் கோல்அடித்த ஒரே வீரர் என்ற சிறப்பை பெற்றதுடன், அதிகவயதில் உலக கோப்பையில் கோல் அடித்தவர் என்ற சாதனையை மெஸ்சியிடம் இருந்தும் பறித்தார். போர்ச்சுக்கல் அணிக்காக உலக கோப்பையில் இதுவரை 10 கோல் அடித்துள்ள ரொனால்டோ, யூசிபியோவின் 9 கோல் சாதனையையும் தகர்த்தார். உலகக்கோப்பைக்கு முதன்முறையாக தகுதி பெற்ற உஸ்பெகிஸ்தான், முதல் போட்டியில் கொலம்பியாவிடம் (3-1) தோற்றதைத் தொடர்ந்து, இந்த தோல்வியால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
