முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியா-ஏ சாம்பியன்: பைனலில் இலங்கை-ஏ அணியை வீழ்த்தியது

தம்புல்லா: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் இலங்கை-ஏ அணியை 66 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா-ஏ அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ரங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை-ஏ அணி கேப்டன் சஹான் அராச்சிகே முதலில் பந்துவீச முடிவு செய்தார். பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூரியவன்ஷி இணைந்து இந்தியா ஏ இன்னிங்சை தொடங்கினர்.

முதல் ஓவரில் இருந்தே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ரதாண்டவமாடிய சூரியவன்ஷி 11 பந்தில் அரை சதம் விளாசி இலங்கை ஏ பந்துவீச்சாளர்களை ஸ்தம்பிக்க வைத்தார். ஆர்யா வைபவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.5 ஓவரில் 132 ரன் சேர்த்து மிரட்டியது. சதத்தை நெருங்கிய சூரியவன்ஷி 94 ரன் (29 பந்து, 10 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசி அராச்சிகே பந்துவீச்சில் வியாஸ்காந்த் வசம் பிடிபட்டார்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும் நூலிழையில் சதங்களை நழுவவிட்டிருந்த வைபவ், மீண்டும் அதே வகையில் அவுட்டானது அவரை மட்டுமல்ல ரசிகர்களையும் மிகுந்த ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. வைபவை தொடர்ந்து ஆர்யாவும் (39 ரன்) வெளியேற இந்தியா ஏ அணியின் ரன் வேகம் சரிய ஆரம்பித்தது அடுத்து வந்த ருதுராஜ் 40 ரன், கேப்டன் திலக் வர்மா 67 ரன், குமார் குஷக்ரா 36, நிஷாந்த் 16, விப்ராஜ் 27 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய அனுகுல் ராய் 39 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அவுட்டாக, இந்தியா ஏ அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 377 ரன் குவித்தது. அடுத்து 50 ஓவரில் 378 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி 47.1 ஓவரில் 311 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. வனுஜா சஹான் அதிகபட்சமாக 62 ரன் விளாசினார்.

சதீரா 52, வியாஸ்காந்த் 39, அராச்சிகே 38, டிக்வெல்லா 25, ஷிராஸ் 21, சமுதிதா 15 ரன் எடுத்தனர். குகதாஸ் மதுளன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ பந்துவீச்சில் யஷ் தாகூர், விப்ராஜ் நிகம் தலா 3, விக்கெட் வீழ்த்தினர். 66 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய இந்தியா ஏ அணி முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. சூரியவன்ஷி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

* 11 பந்தில் அரை சதம் வச்சி செஞ்ச வன்ஷி! உலக சாதனை
இலங்கை ஏ அணிக்கு எதிராக நேற்று நடந்த முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில், இந்தியா ஏ அணி இளம் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி 11 பந்தில் அரை சதம் விளாசி லிஸ்ட் ஏ போட்டிகளில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். லீக் சுற்றில் சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்திய இலங்கை ஏ அணி வீரர்கள் வைபவிடம் வாய் சவடால் பேசி வம்புக்கு இழுத்தனர்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்ற அந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை உண்டாக்கியது. வைபவ் வார்த்தைகளால் அல்ல தனது மட்டையால் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவுரையும் வழங்கப்பட்டது. இதனால் நேற்றைய பைனலில் சற்று நெருக்கடியுடனேயே களமிறங்கினாலும், சூரியவன்ஷி தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை ஏ அணி பந்துவீச்சாளர்களை மிரளவைத்தார்.

அவர் எதிர்கொண்ட முதல் 11 பந்தில் 4, 4, 4, 6, 6, 0, 6, 4, 4, 6, 6 என 5 பவுண்டரி, 5 சிக்சர்களை பறக்கவிட்டு உலக சாதனையை வசப்படுத்தினார். முன்னதாக, 2015ல் பாகிஸ்தான் அணியுடன் நடந்த லிஸ்ட் ஏ போட்டியில் இலங்கையின் குசால் பெரேரா 12 பந்துகளில் அரை சதம் விளாசி படைத்த சாதனையை வன்ஷி அசால்டாக முறியடித்ததுடன், தன்னை வம்புச்சண்டைக்கு இழுத்த இலங்கை ஏ அணி வீரர்களுக்கு சரியான பாடம் புகட்டினார். உலக சாதனை படைத்த வன்ஷிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

Related Stories: