*ஆட்கள் பற்றாக்குறையால் டிராக்டர்களுக்கு மவுசு
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் தொடர்வதால் தென்னை நார் உலர வைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் ஆட்கள் பற்றாக்குறையால் டிராக்டர் இயந்திரம் கொண்டு உலர வைக்கும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயமே அதிகளவில் உள்ளது. சுற்றுவட்டார கிராம பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் தென்னை நார் உலரவைக்கும் பணிகள் நடக்கிறது.
மழைக்காலங்களில் நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருக்கும். பின் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது நார் உலரவைத்து அதன் உற்பத்தியை அதிகமாக்குகின்றனர். இங்கு உற்பத்தியாகும் நார் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பொழிந்தது. இதனால் அச்சமயத்தில் நார் உலர வைப்பது மிகவும் மந்தமானது.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் துவக்கம் வரை பனிப்பொழிவு மற்றும் அவ்வப்போது சாரல் மழைப்பொழிவு இருந்ததால் நார் உலர வைக்கும் பணி மந்தமாக இருந்தது. வெளியிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் நாரின் அளவு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில், பிப்ரவரியில் இருந்து சில மாதமாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மேலும், கோடை மழை பொய்த்ததுடன், தற்போது தென்மேற்கு பருவமழை தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. பெரும்பாலான களங்களில், நார் உலர வைக்கும் பணியில் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில தொழிலாளர்களே ஈடுபடுகின்றனர்.
இருப்பினும் அந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை போதியளவு இல்லாமல் இருப்பதால், தொழிற்சாலைகளில் மட்டையிலிருந்து அதிகபடியான நார்களை பிரித்தெடுத்து டிராக்டரில் தனி இயந்திரம் பொறுத்தி விரைந்து உலர வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நார் உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘நடப்பாண்டில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது பெய்ய வேண்டிய பருவ மழை தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
இதனால்,வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, களங்களில் நார் உலர வைக்கும் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளோம். தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், தொழிற்சாலையில் அதிகளவு நார் உற்பத்தி செய்யப்பட்டு, அதனை விரைந்து உலர வைத்து எடுப்பதற்காக, டிராக்டரில் நவீன இயந்திரம் பொறுத்தி அதன் மூலம் உலர வைக்கும் பணிகள் தொடர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி அதிகரித்து வெளியிடங்களுக்கு அதிக அளவு அனுப்ப ஏதுவாக இருக்கும்’’ என தெரிவித்தனர்.
