வால்பாறை : வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யாமல் இடைவிடாத சாரல் மழையாக மட்டுமே பதிவாகி வருவதால், ஆசியாவின் ஆழமான அணைகளில் ஒன்றாக கருதப்படும் சோலையார் அணை நீர்மட்ட உயர்வு எதிர்பார்த்த அளவில் இல்லாமல் உள்ளது. வால்பாறை மலைப்பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை பெய்வது வழக்கம்.
குறிப்பாக மேல்நீராறு, கீழ்நீராறு, சின்னக்கல்லாறு, சோலையார் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும்போது சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இதுவரை பரவலான கனமழை பதிவாகாததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்த அளவிலேயே உள்ளது.
கடந்த சில நாட்களாக சாரல் மழை மற்றும் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வந்தாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் அணை நிரம்பும் வேகம் மந்தமாக காணப்படுகிறது. சோலையார் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மெதுவாக உயர்ந்து வருவதாகவும், தொடர்ச்சியான கனமழை பெய்தால் மட்டுமே கணிசமான நீர்வரத்து கிடைக்கும் எனவும் பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சோலையார் அணை மட்டுமின்றி, மேல்நீராறு, கீழ்நீராறு உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்ட உயர்வும் மழைப்பொழிவை சார்ந்தே உள்ளதால், பிஏபி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பரவலான மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி சின்னக்கல்லாறு பகுதியில் 57 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறையில் 51 மி.மீ., சோலையாரில் 50 மி.மீ., சிங்கோனா பகுதியில் 48 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், அணைக்கு வரும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவில்லை.
165 அடி கொள்ளளவு கொண்ட சோலையார் அணையின் தற்போதைய நீர்மட்டம் 65 அடியாக மட்டுமே உள்ளது. மேலும், அணைக்கு வினாடிக்கு 292 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருப்பதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
