விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும்

 

கீழ்வேளூர், ஜூன் 23: கீழ்வேளூர் ஒன்றியம் கடம்பன்குடியில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு மீள்குடி அமர்வு இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும் என்று கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம் கடம்பன்குடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் விவசாய நிலங்களை 1987ம் ஆண்டு முறைப்படி கையகப்படுத்தியது. விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் கடம்பன்குடியை சேர்ந்த ஏராளமான விவசாய தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தங்களுக்கு ஓஎன்ஜிசி நிறுவனம் மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு இழப்பீட்டு தொகை வழங்க கோருதல் சம்பந்தமாக கடம்பன்குடி கிராம கூட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கடம்பன்குடி, மூங்கில்குடி, விளாம்பாக்கம், ஒக்கூர் பகுதியியை சார்ந்த சுமார் 750 பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களுக்கு ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி நிறுவனம் மறுவாழ்வு மற்றும் மீள்குடி அமர்வு தொகை வழங்கப்படவேண்டும். ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஏற்படும் ஒப்பந்த பணிகளில் மற்றும் நிரந்தரப் பணியிடங்களில் காலியிடங்களில் கடம்பன்குடி, மூங்கில்குடி கிராமத்தை சார்ந்தவார்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலம் கடம்பன்குடி சார்ந்த பள்ளிக்கூடங்கள், குடிநீர்பணிகள், சமுதாயக்கூடம் பணிகள் மற்றும் ஏழை ஏளியோருக்கு முன்னுரிமையில் வழங்கிட வேண்டும். கடம்பன்குடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சுகாதாரப்பணிகள்,
கட்டுமானப்பணிகள் மற்றும் இதர ஒப்பந்தப்பணிகளிலும் கடம்பன்குடியை சார்ந்த கூலிபணியாளர்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ஓஎன்ஜிசி நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து கிராம கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை மனுவாக கடம்பங்குடியில் உள்ள ஓஎன்ஜிசி அதிகாரிகளிடம் கிராம மக்கள் வழங்கினர்.

 

Related Stories: