அரசு பஸ்சை வழிமறித்து சென்ற போதை நபர்

சங்ககிரி, ஜூன் 24: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பணிமனைக்கு சொந்தமான அரசு பஸ், சேலத்திலிருந்து கோவை நோக்கி 59 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சங்ககிரியில் பயணிகளை இறக்கிவிட்டு, மீண்டும் கோவை நோக்கி பஸ் புறப்பட்டபோது, டூவீலரில் வந்த நபர் ஒருவர், திடீரென பஸ் முன்பகுதியில் சென்று, பஸ் முன்னே செல்ல விடாமல், தொடர்ந்து மறித்தபடி சென்றார். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை பஸ்சின் முன்பாக ஆபத்தான முறையில், டூவீலரை இயக்கியதால், டிரைவர் பஸ்சை எச்சரிக்கையுடன் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் பஸ்சில் பயணம் செய்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட 59 பயணிகளும் அச்சத்துடனும் பதற்றத்துடனும் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதையில் இருந்ததாக கூறப்படும் அந்த நபரின் அலட்சியமான செயலால், எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் நிலவியதாக பயணிகள் வேதனை தெரிவித்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் சிலர், இந்த காட்சிகளை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதால், வேகமாக பரவி பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: