அய்யனாரப்பன் கோயில் உண்டியல் திறப்பு

இடைப்பாடி, ஜூன் 24: இடைப்பாடி அருகே வேம்பனேரி பகுதியில் பிரசித்தி பெற்ற அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இந்த கோயில் 7 ஊர்களை சேர்ந்த 36 குக்கிராமங்களுக்கு சொந்தமானது. அய்யனாரப்பன் சுவாமியை கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக 7 ஊர்களுக்கு சுவாமியை ஊர்வலமாக தூக்கி செல்வர். ஆண்டுதோறும் சித்திரை மாத கடைசி நாள், வைகாசி மாதத்தில் முதல் மற்றும் 2ம் நாள் என 3 நாட்களிலும் சுவாமி ஊர்வலம் ஏழு ஊர்களுக்கும் நடக்கும். அதேபோல் நடப்பாண்டு கடந்த மே 14, 15 மற்றும் 16ஆகிய தேதிகளில் 3 நாள் ஏழு ஊர்களுக்கும் தங்க கீரிடத்துடன் குதிரை வாகனத்தில் அய்யனாரப்பன் சுவாமி ஊர்வலம் நடந்தது.

இந்த சுவாமி ஊர்வலத்தின் போது, சுவாமி மீது போடப்பட்ட தங்க நகைகள், வெள்ளி நகைகள், பணம் ஆகியவற்றையும், கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்களில் இருந்த பொருட்கள், பணம் ஆகியவற்றை எண்ணும் பணி நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் செயல் அலுவலர் ஜெயப்பிரியா, அறநிலையத்துறை ஆய்வர்கள் கார்த்திகா, ஜோதிலட்சுமி, கோயில் பூசாரி தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. சுவாமி மீது விழுந்த மற்றும் உண்டியல் ஆகியவற்றின் மூலம் 41 கிராம் தங்க நகையும், 2 கிலோ 561 கிராம் வெள்ளி பொருட்களும், ரூ.12 லட்சத்து 80 ஆயிரத்து 77 பணமும் இருந்தது. இதையடுத்து இப்பணத்தை கோயில் நிர்வாக வங்கி கணக்கிற்கு கொண்டு செல்லப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: