பள்ளிப்பட்டு, ஜூன் 22: பள்ளிப்பட்டு அருகே மலை அடிவாரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திரா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு சுற்றுவட்டார் பகுதியில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் ஆந்திரா எல்லை பகுதியில் உள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே மலைக்கோயில் அடிவாரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் வெங்கடாதிரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வெளியகரத்தில் மலை அடிவாரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, பதுங்கி இருந்த 2 வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் சோதனை செய்த போது 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது பள்ளிப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் ஜெயந்தி காலனியை சேர்ந்த ஜெய்பிரகாஷ் (22), ரங்கையப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (21) ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
