மாதவரம் பகுதியில் போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி நிலம் அபகரிப்பு: புரோக்கர் உள்பட 4 பேர் கைது

 

மாதவம், ஜூன் 16: மாதவரம் பகுதியில் போலி பட்டா தயாரித்து ரூ.8 கோடி நிலத்தை அபகரித்த ரியல் எஸ்டேட் புரோக்கர், அவரது மனைவி உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மாதவரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரி (74). இவருக்கு, மாதவரம் லோட்டஸ் காலனி முதல் தெருவில் 21.5 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை மாதவரம் பகுதியை சேர்ந்த தயாளன், அவரது மகன் ராஜன், ராதா மற்றும் அவரது மகன் கார்த்திக், சீனிவாசன் மற்றும் பிரதீபா ஆகியோர், போலி பட்டா தயாரித்து, 3 பிரிவாக கிரைய பத்திரங்களை தங்களது பெயரில் பதிவு செய்துள்ளனர். அதில் 2 கிரைய பத்திரங்களை தனியார் நிறுவனம் ஒன்றில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

அடமானம் வைத்த நிலத்திற்கு முறையாக வட்டி கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தனியார் நிறுவனம் அடகு வைத்த நிலத்தை நேரில் வந்து ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நிலத்தின் உரிமையாளரான சுந்தரிக்கு தெரியவந்து விசாரித்த போது தான், தனது நிலத்தை போலி ஆவணம் மூலம் தயாளன் மற்றும் ராதா குடும்பத்தினர் அபகரித்தது தெரியவந்தது. இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் சுந்தரி புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்திய போது, நிலத்தை அபகரித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்ட கார்த்திக் என்பவர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வருவதும், அருண் பிரசாத் என்பவர் ரியல் எஸ்டேட் செய்து வருவதும் தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் கூட்டு சேர்ந்து ரூ.8 கோடி மதிப்புள்ள நிலத்தை கார்த்திக் தனது தாய் ராதா (56), அருண் பிரசாத் மனைவி பிரதீபா (30) ஆகியோர் பெயரில் போலி பட்டா மூலம் கிரையம் செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட கார்த்திக் (36), அவரது தாய் ராதா (56), அருண் பிரசாத் (29), அவரது மனைவி பிரதீபா (30) ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

 

Related Stories: