மெஸ்ஸிக்கு ரெட்? அல்ஜீரியா கறார் புகார்

முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காட்டாமல் நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டதாக அல்ஜீரியா அணி சார்பில் அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த அணிகளிடையே நடந்த ஜே பிரிவு லீக் ஆட்டத்தின்போது, கேப்டன் அய்ஸா மண்டியை பின்புறமாக இருந்து மோதி விழச் செய்ததாக மெஸ்ஸி மீது அல்ஜீரியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மெஸ்ஸிக்கு சிவப்பு அட்டை காட்டி வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகே மெஸ்ஸி ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினாவை வெற்றி பெறச் செய்ததுடன் உலக கோப்பையில் அதிக கோல் அடித்த வீரராகவும் சாதனை படைத்தார். இந்நிலையில், மெஸ்ஸி மட்டுமல்லாது நடுகள வீரர் அலெக்சிஸ் மேக் அலிஸ்டரும் கூட விதிமீறலில் ஈடுபட்டதாகவும், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிபாவிடம் அல்ஜீரியா புகார் அளித்துள்ளது. மேலும், போலந்து நடுவர் சைமன் மார்சினியாக் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டதாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.

அர்ஜென்டினா அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் நாளை ஆஸ்திரியாவை எதிர்கொள்ளும் நிலையில் இந்த புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

Related Stories: