சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

கரூர், மார்ச் 9: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சட்டமன்ற தேர்தல் 2021ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகளை மாவட்ட கலெக்டர் மலர்விழி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலங்களை பார்வையிட்ட கலெக்டர், கையெழுத்து பிரசார பதாதையில் கையெழுத்திட்டு அதனையும் துவக்கி வைத்தார்.

பின்னர் 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியும் துவக்கி வைக்கப்பட்டது. இந்த பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து துவங்கி மில்கேட், சுங்ககேட் வழியாக திருமாநிலையூரில் முடிவடைந்தது. பின்னர் கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளதாவது: சர்வதேச மகளிர் தினமான நேற்று பெண்கள் ஒன்றுகூடி வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலந்து கொண்டுள்ளனர். எதிர்காலத்தை முடிவு செய்யும் அனைவரும் தவறாமல் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். ஜனநாயக திருவிழாவாக உள்ள இந்த தேர்தலில், நமது வாக்கை பணத்துக்காகவோ, பரிசு பொருளுக்காகவோ விற்கக்கூடாது. 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மகளிர் திட்ட இணை இயக்குநர் வாணி ஈஸ்வரி உள்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: