×

இந்த ஆண்டிற்கான சொகுசு கப்பல் சீசன் தொடக்கம்: சுமார் 1800 பயணிகள் பயணம்

சென்னை: இந்த ஆண்டிற்கான சொகுசு கப்பல் சீசன் தொடங்கியது. சென்னை துறைமுகத்திற்கு ‘எம்.வி. எம்பிரெஸ்’ என்ற சொகுசு பயணிகள் கப்பல் நேற்று காலை வந்தடைந்தது. ‘சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவரின் வழிகாட்டுதலின் கீழ், இந்த கப்பலுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய முறைப்படி பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை துறைமுகம் நேற்று ஒரே நாளில் மொத்தம் 3,600 பயணிகளை கையாண்டு ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. கொச்சியில் இருந்து கப்பலில் சென்னைக்கு வந்த 1,800 பயணிகள் இறங்குவதற்கும், சென்னையில் இருந்து அதே கப்பலில் புதிய பயணமாக செல்லவிருக்கும் 1,800 பயணிகள் ஏறுவதற்கும் உள்ள அனைத்து ஏற்பாடுகளும் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தன.

இதன் மூலம் இந்த ஆண்டிற்கான சொகுசு கப்பல் சீசன் நேற்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த கப்பல் ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மூன்று மாதங்களில் மொத்தம் 21 கடல் பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு தமிழ்நாட்டின் விருந்தோம்பலை உணர்த்தும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் ‘வெஸ்ட் குவே 4’ தளத்தில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. கப்பலில் இருந்து இறங்கிய பயணிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திலகமிட்டு, மலர்க்கொத்துகளும், வரவேற்பு பானங்களும் வழங்கப்பட்டன. மேலும், பயணிகளை மகிழ்விக்க வீணைக் கச்சேரியும் நடைபெற்றது.

நேற்று வந்த பயணிகள் அனைவரும் அண்மையில் நவீனப்படுத்தப்பட்ட சர்வதேச சொகுசு பயணிகள் முனையத்தின் உலகத்தரம் வாய்ந்த வசதிகளைப் பயன்படுத்தினர். 4,103 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நவீன முனையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 800 பயணிகளை மிக வேகமாகத் தடையின்றி கையாள முடியும். முனையம் முழுவதும் முழுமையாக ஏசி வசதி செய்யப்பட்டுள்ளத சுங்கத்துறை மற்றும் குடிவரவு துறை கவுன்டர்கள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டதால் பயணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவாக வெளியேறினர். அதிநவீன லக்கேஜ் ஸ்கேனர்கள் மூலம் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டன. நவீன ஓய்வறைகள், பயணிகள் எளிதாக ஏறி இறங்குவதற்காக எஸ்கலேட்டர்கள் மற்றும் உணவு விடுதி வசதிகளும் முனையத்தில் இடம்பெற்றிருந்தன.

தென்னிந்தியாவை சர்வதேச நாடுகளுடன் இணைக்கும் முக்கிய துறைமுகமாகச் சென்னை விளங்குகிறது. வரும் வாரங்களில், இந்த கோர்டெலியா சொகுசு கப்பல் தனது பயணத்தை சர்வதேச எல்லைகளுக்கு விரிவுபடுத்தி, இலங்கையின் முக்கிய நகரங்களான ஹம்பாந்தோட்டா (காலி), திரிகோணமலை மற்றும் கங்கசந்துறை ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியாவின் முக்கிய கடற்கரை நகரங்களான விசாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளையும் இந்த சொகுசு கப்பல் பயணம் இணைக்கிறது. உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்பு மற்றும் தமிழ்நாட்டின் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றின் மூலம் சென்னை துறைமுகம் உலக சொகுசு கப்பல் வரைபடத்தில் இன்று தனது முத்திரையை மேலும் வலுவாகப் பதித்துள்ளது.

Tags : Chennai ,Chennai port ,Chennai Port Trust ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் உள்ள 46 கோயில்களின் உபரி...