×

டெல்லியில் தட்டுகள், கரண்டிகளை தட்டி முழக்கம்; அமைச்சர் பிரதான் பதவி விலகும் வரை கலைய மாட்டோம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: தேர்வு முறைகேடுகள், தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகள் உள்ளிட்டவற்றை கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் தட்டுகள் மற்றும் கரண்டிகளை தட்டி இளைஞர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

டெல்லியில் கடந்த 6ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது நீட் வினாத் தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் நேற்று இரண்டாவது முறையாக போராட்டம் நடத்தப்பட்டது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கேவின் அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தட்டு மற்றும் கரண்டியை கொண்டு வந்திருந்தனர். முழக்கமிடும்போது அவற்றை தட்டி ஒலி எழுப்பினார்கள். தேர்வு நிர்வாகம் தொடர்பான பிரச்னைகளில் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி போராட்டக்காரர்கள் தங்கள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்கள்.

போராட்ட இடத்திற்கு வந்த அபிஜித் இன்றைய மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்கவே நாங்கள் இங்கு வந்துள்ளோம் என்றார். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பேசிய அபிஜித்,‘‘நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள் இங்கு வந்துள்ளதால் அதிகாரிகளிடம் நான் ஒரு கோரிக்கையை விடுக்கிறேன். நீதி கிடைக்கும் வரை அவர்கள் இங்கேயே அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். எனவே எங்கள் போராட்டத்துக்கான அனுமதியை நீட்டிக்குமாறு டெல்லி காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன். இந்த போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுகின்றது. பேச்சுவார்த்தைகளின் கதவுகள் திறந்தே இருக்கின்றன. ஆனால் கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதவி விலக வேண்டும் என்பது மட்டுமே ஒரே நிபந்தனை” என்றார்.

போராட்டத்தை நீட்டிக்க காவல்துறை அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கையுடன் மாலை ஜந்தர்மந்தரில் நடக்கும் போராட்டத்தில் இணையுமாறு ஆதரவாளர்களுக்கு திப்கே அழைப்பு விடுத்திருந்த நிலையில், போராட்டத்தை தொடர்வதற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

Tags : DELHI ,MINISTER ,PRADHAN ,KARAPANBUCHI JANATA PARTY ,New Delhi ,Karapanpuchi Janata Party ,Karabapuchi Janata Party ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து:...