கொல்க்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நிதி ஆதாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, ரூ.440 கோடி இருப்பு கொண்ட கட்சியின் 3 வங்கி கணக்கில் பணம் எடுக்கும் வசதி முடக்க்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் கடும் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. இதில் கட்சியின் நிதி நிர்வாகத்தை கட்டுப்படுத்துவதில் முன்னாள் அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ரிதப்ரதா பானர்ஜி ஆகியோர் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் பிதான்நகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திரிணாமுல் காங்கிரசின் 3 வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள நிதியின் ஆதாரம் குறித்து சந்தேகம் தெரிவித்து, அவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தியிருந்தனர். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, 3 வங்கி கணக்கில் பணம் எடுக்கும் வசதியை முடக்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே தலைமைத்துவம் குறித்த உட்கட்சி பிரச்னை தீர்க்கப்படும் வரை கட்சியின் டெபாசிட் தொகையை பாதுகாக்க பரிவர்த்தனைகளை நிறுத்தி வைக்கக் கோரி அரூப் பிஸ்வாஸ் வங்கிக்கு கடிதம் எழுதிய சில நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மம்தா ஆதரவு எம்எல்ஏ குணால் கோஷ் கூறுகையில், ‘‘கட்சி பொருளாளர் பதவியில் இருந்து அரூப் பிஸ்வாஸ் நீக்கப்பட்டுள்ளார். கடந்த 5ம் தேதி நடந்த கட்சி செயற்குழு கூட்டத்தில் பொருளாளராக சுபாஷிஷ் சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, நிதி நிர்வாகம் தொடர்பாக கருத்து தெரிவிக்க பிஸ்வாசுக்கு அதிகாரமில்லை’’ என கூறி உள்ளார்.
