×

நாடு முழுவதும் நடைபெறுகிறது; 5440 மையங்களில் இன்று நீட் மறுதேர்வு: 2 லட்சம் அதிகாரிகள், 6,700 பார்வையாளர்கள் கண்காணிப்பு; முறைகேட்டை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு

புதுடெல்லி: நீட் மறுதேர்வு நாடு முழுவதும் 5440 மையங்களில் இன்று நடக்க உள்ளது. இதில், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுவதை தவிர்க்க, தேர்வு மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2 லட்சம் அதிகாரிகள், 6,700 பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவ இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட்-யுஜி நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 23 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மாதம் 12ம் தேதி நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது. மேலும், நீட் மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நீட் தேர்வுக்காக பல மாதங்கள் கஷ்டப்பட்டு படித்து தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு ரத்து அறிவிப்பால் கடும் மன உளைச்சல் அடைந்தனர். இதனால் கடந்த 37 நாட்களில் நாடு முழுவதும் 12 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தமிழகத்தின் கோவை, சேலத்தைச் சேர்ந்த மாணவிகள் மறுதேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நீட் மறுதேர்வு இன்று நடக்க உள்ளது. நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். தேர்வை நடத்த, இந்தியா மற்றும் 14 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 551 நகரங்களில் 5,440 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வினாத்தாள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய விமானப்படை மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்குப் பிறகு, முறைகேடுகளைத் தடுக்க 2 லட்சம் அதிகாரிகள் மற்றும் 6,669 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த சோதனைக்காக தேர்வு நேரம் 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தடுக்க ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் முறை, ஏஐ கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளுக்கு தற்காலிக தடையும் விதிக்கப்பட்டு, தேர்வுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் முறைகேடு ஏற்படுவதை தடுக்க 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தேர்வு ஏற்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘95 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வறைகள் அனைத்திலும் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. 1,38,560 சிசிடிவி கேமராக்கள், ஒன்றிய, மாநில மற்றும் கல்வி அமைச்சகங்கள் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. 51,311 ஜாமர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சராசரியாக 40 முதல் 50 பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 6700 கண்காணிப்பாளர்கள், 100க்கும் மேற்பட்ட விர்ஜுவல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். வினாத்தாள்களை கொண்டு செல்ல போலீசார், துணை ராணுவம், இந்திய விமானப்படை பயன்படுத்தப்படுகின்றது’’ என கூறப்பட்டுள்ளது.
சமீபகாலமாக நீட், சிபிஎஸ்இ, கியூட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளில் தொடர்ச்சியாக பல்வேறு குளறுபடிகள் நடந்து வருவது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் நீட் மறுதேர்வை எவ்வித சர்ச்சையும் இல்லாமல் நடத்த ஒன்றிய கல்வி அமைச்சகமும் தீவிர ஏற்பாடுகளை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பகல் 1.30 மணிக்கு பிறகு வந்தால் அனுமதி இல்லை
நீட் மறுதேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நடத்தப்பட உள்ளது. மாணவர்கள் காலை 11 மணி முதல் பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டுமென தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது. தேர்வு தொடங்க, அரை மணி நேரத்திற்கு முன்பாக, பகல் 1.30 மணியுடன் தேர்வு மைய நுழைவாயில்கள் மூடப்படும். அதன் பிறகு வரும் மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தேசிய தேர்வு முகமை கண்டிப்புடன் கூறி உள்ளது.

  • நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு கடந்த மே 3ம் தேதி நடத்தப்பட்டது. அதில், தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால் மறுதேர்வு இன்று நடத்தப்படுகிறது.
  • நீட் மறுதேர்வை எழுத நாடு முழுவதும் 22.79 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
  • நீட் மறுதேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.15 மணி வரை நடக்கும்.
  • தேர்வெழுதும் மாணவர்கள் பிற்பகல் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வர வேண்டுமென தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது.
Tags : NEET ,New Delhi ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து:...