புதுடெல்லி: மம்மூட்டி, விஜய் அமிர்தராஜ், ரோகித்சர்மா உள்ளிட்ட 65 பேருக்கு ஜூன் 23ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம விருதுகள் வழங்குகிறார். இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. ெமாத்தம் 65 முக்கியப் பிரமுகர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டென்னிஸ் ஜாம்பவான் விஜய் அமிர்தராஜ், நடிகர் மம்மூட்டி, பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள விழாவில் இந்த உயரிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் உள்ள ‘கணதந்திர மண்டபத்தில்’ ஜனாதிபதி திரவுபதிமுர்மு பத்ம விருதுகளை வழங்குவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விழாவில், இரண்டு பத்ம விபூஷண், ஏழு பத்ம பூஷண் மற்றும் 56 பத்ம ஸ்ரீ விருதுகள் உட்பட மொத்தம் 65 பத்ம விருதுகளை ஜனாதிபதி வழங்க உள்ளார். முன்னதாக, மே 25ஆம் தேதி நடைபெற்ற முதல் விருது வழங்கும் விழாவில், இரண்டு பத்ம விபூஷண், ஆறு பத்ம பூஷண் மற்றும் 57 பத்ம ஸ்ரீ என மொத்தம் 65 பத்ம விருதுகளைக் ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
