×

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு; தெலங்கானா அரசு அதிகாரியின் ரூ.1.5 கோடி ரொக்கம் சிக்கியது

ஐதராபாத்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தெலங்கானா அரசு அதிகாரிக்கு சொந்தமான ரூ.1.5 கோடி ரொக்கம், தங்க, வைர நகைகள் உள்ளிட்டவை சிக்கியது. தெலங்கானாவில் நில அளவை மற்றும் நிலப்பதிவேடுகள் துறையின் துணை இயக்குநராக நரஹரி ராவ் சுங்காரி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 16ம் தேதி, நரஹரி ராவ் சுங்கரியின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 11 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.13 கோடிக்கும் அதிகமான சொத்துகள் கண்டறியப்பட்டன. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட நரஹரி ராவ் சுங்கரி தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்படடுள்ளார்.

இந்த விசாரணையின் தொடர்ச்சியாக, அவருக்கு தொடர்பான இடங்களில் சோதனை நடத்த நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதன்படி நரஹரி ராவ் சுங்கரியின் மனைவி பெயரில் இருந்த இரண்டு வங்கி லாக்கர்களில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். அந்த லாக்கர்களில் ரூ.1.5 கோடி ரொக்க பணமும், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள் மற்றும் தங்க கட்டிகள் என சுமார் இரண்டு கிலோ எடையுள்ள பொருள்களும் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Telangana government ,Hyderabad ,Narahari Rao Sungari ,Deputy Director ,Survey and Land Records Department ,Telangana ,
× RELATED மகாராஷ்டிராவில் பயங்கர விபத்து:...