குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு; நெல்லையில் 18 நாளில் 17 போக்சோ வழக்குகள்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் கடந்த 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதியப்பட்டு, 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் 10ம் தேதி தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து முதல்வர் விஜய் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சிங்கப்பெண் சிறப்பு படையை துவக்கி வைத்தார். அதில் உள்ள பெண் போலீசாருக்கு கூட பாதுகாப்பில்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. கடந்த 40 நாட்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் சீண்டல்கள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை, புறநகர் பகுதிகளில் 5 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும், மாநகர் பகுதியில் 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் இயங்கி வருகின்றன. கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 18ம் தேதி வரையிலான குறுகிய கால இடைவெளியில், புறநகர் காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 12 போக்சோ வழக்குகளும், மாநகர் காவல் நிலைய எல்லைகளில் 5 வழக்குகளும் என மொத்தம் 17 வழக்குகள் பதிவாகியுள்ளன. புறநகர் பகுதிகளில் அதிகபட்சமாக நெல்லை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 5 வழக்குகளும், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும்,

சேரன்மகாதேவி மற்றும் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மாநகர் பகுதியில் உள்ள நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவாகியுள்ளது. இந்த 17 வழக்குகளிலும் தொடர்புடைய 17 நபர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 18 வயது இளைஞர் முதல் 66 வயது முதியவர் வரை வெவ்வேறு வயதுடையவர்கள் அடங்குவர்.

காதலிப்பதாக கூறி சிறுமி பலாத்காரம்
நெல்லை மாவட்டம், மானூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் கரண் (25). இவர் 16 வயது சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த சிறுமிக்கு கரண் பாலியல் தொல்லை அளித்து வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் நெல்லை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று கரணை கைது செய்தனர்.

பள்ளியில் பெண் உதவியாளருக்கு பாலியல் தொந்தரவு
ராமநாதபுரம் தனியார் பள்ளி ஒன்றில் அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்த 39 வயது பெண், அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் ஏர்வாடியை சேர்ந்த சுல்தான் அலாவுதீன் (49) கணினி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 15ம் தேதி மாலை பள்ளி முடிந்ததும் பணியாளர்கள் அனைவரும் புறப்பட்டனர். அப்போது புறப்பட தயாராக இருந்த பெண் அலுவலக உதவியாளருக்கு, சுல்தான் அலாவுதீன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், மறுநாள் பள்ளிக்கு வராமல் விடுப்பு எடுத்தார். இதனை அறிந்த சுல்தான் அலாவுதீன், அந்த பெண்ணிற்கு போன் செய்து, ‘ஏன் பள்ளிக்கு வரவில்லை’ என சமரசம் செய்வது போன்று பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து அந்த பெண், கேணிக்கரை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சுல்தான் அலாவுதீனை நேற்று கைது செய்தனர்.

Related Stories: