படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்: வாலாஜாபாத் அருகே கொடூரம்

 

சென்னை: காஞ்சிபுரம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூலி வேலை செய்யும் தனது தாய்-தந்தையுடன் வசித்து வருகிறார். பெண்ணின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் பாலகிருஷ்ணன் (38) என்பவர், கஞ்சா போதையில் மாற்றுத்திறனாளி பெண் வீட்டுக்குள் நுழைந்து அவரின் வாயை பொத்தி காட்டுமிராண்டித்தனமாக பாலியல் வன்புணர்ச்சி செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு வந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண் தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் பாலகிருஷ்ணனை தேடிப்பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் சம்பவம் குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். மாகறல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பாலகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெண்களை பாலியல் வன்புணர்ச்சி செய்யும் வழக்குகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அச்சம் இல்லாமல் மாற்றுத் திறனாளி பெண் சீரழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 வயது சிறுமிக்கு 14 வயது சிறுவன் பாலியல் தொல்லை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவரது 8 வயது மகள் நேற்று அங்குள்ள புதர் நிறைந்த பகுதியில் இயற்கை உபாதையை கழிக்கச் சென்றார். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன், திடீரென சிறுமியை புதரில் தள்ளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிட்டார். பின்னர் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறினார். இதுகுறித்த புகாரின்பேரில் உம்ராபாத் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: