ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் இம்தியாஸ் (24), டீ மாஸ்டர். அதே பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன்(22). இருவரும் நண்பர்கள். நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் நிம்மியம்பட்டு பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள புளியந்தோப்பு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கள்ளச்சந்தையில் விற்கப்பட்ட மதுபாட்டில்களை வாங்கி இம்தியாஸும், தாஜுதீனும் குடித்ததார்களாம். அப்போது இம்தியாஸின் தாய் குறித்து தாஜுதீன் தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே போதையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் கைகலப்பாக மாறியது.
அப்போது ஆத்திரமடைந்த தாஜுதீன், பீர்பாட்டிலை உடைத்து இம்தியாஸின் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரி குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் இம்தியாஸ் மயங்கி சாய்ந்தார். சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து இம்தியாஸை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இம்தியாஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனிடையே வாணியம்பாடி ஜாப்ராபாத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த தாஜுதீனை வாணியம்பாடி டவுன் போலீசார் பிடித்து ஆலங்காயம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து தாஜுதீனை நேற்று கைது செய்தனர்.
