அரசு மருத்துவமனைக்கு கொரோனா சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை, மார்ச் 9:  கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக தினமும் 50 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதனால், சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கொரோனா ஐ.எல்.ஐ புறநோயாளிகள் பிரிவு வார்டில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அதன்படி, தற்போது தினமும் 70 முதல் 80 பேர் வரை கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருகின்றனர். இவர்களில் பரிசோதனை செய்யப்பட்டு பாதிப்பு இருக்கும் என டாக்டர்கள் சந்தேகிக்கப்படும் நபர்கள் மட்டும் ரிசல்ட் வரும் வரை மருத்துவமனை வார்டில் அட்மிட் செய்யப்படுகின்றனர். அதன்படி, தற்போது உள்நோயாளிகளாக மட்டும் 21 பேர் கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். தவிர, 48 பேர் கொரோனா ரிசல்ட் வருவதற்காக காத்திருக்கின்றனர். பாதிப்பு அதிகரித்து வருவதற்கு பொதுமக்களின் அலட்சியம் காரணமாக கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில், “தற்போது ஐஎல்ஐ புறநோயாளிகள் வார்டிற்கு தினமும் 80 பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்.  இவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. அரசு கூறும் வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனால், நோய் பரவலை தடுக்க முடியும்” என்றார்.

Related Stories:

>