அன்னூர், டிச.23: அன்னூரில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் கறிக்கோழி உற்பத்தி நிறுத்தம் வரும் 1-ம் தேதி முதல் நடத்தப்படும் என ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச்செயலாளர் முத்து விஸ்வநாதன், கறிக்கோழி பண்ணை மாநில ஒருங்கிணைப்பாளர் ஏ.பி.டி மகாலிங்கம் தலைமை வகித்தார். மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் நீலாவதி, திருப்பூர் கிழக்கு மாவட்ட கொள்கை பரப்புச்செயலாளர் குப்புசாமி, மாநில இளைஞரணி செயலாளர் கோபால்சாமி, கோவை வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வுக்கான காரணத்தை முன்னிறுத்தி பண்ணை உரிமையாளர்கள் கோழி வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக்கோரி அனைத்து கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பண்ணையாளர்களும் ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நிறுவனங்கள் கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தி தராத காரணத்தால் போராட்டம் நடத்தப்படும். கடந்த 5 ஆண்டுகளில் தேங்காய் மஞ்சி விலை, பணியாளர்களுக்கான கூலி, பண்ணை பராமரிப்பு, மின்சார கட்டணம் என கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்களுக்கு கறிக்கோழி வளர்ப்பு செலவுகள் அதிகரித்துள்ளது. இதனால் பண்ணைகளில் கறிக்கோழி வளர்ப்போர் தொழிலை லாபகரமாக செய்ய முடியவில்லை. இதனால் அனைத்து கறிக்கோழி பண்ணையாளர்களும் மிகப் பெரிய நஷ்டத்தை ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகின்றனர்.
மேலும் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்களிடம் வளர்ப்பு கூலி உயர்வு கேட்டு இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே கறிக்கோழி வளர்ப்பதை நிறுத்த முடிவு செய்தனர். இதில் வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் அனைவரும் கறிக்கோழி வளர்ப்பதை நிறுத்தி தங்களது வளர்ப்பு கூலி உயர்வு கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
