தேர்தல் பறக்கும் படை சோதனையில் மாவட்டம் முழுவதும் ரூ.4.80 லட்சம் பறிமுதல்

அந்தியூர்,மார்ச்9: ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4.80 லட்சம் சிக்கியது. அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் கவுந்தப்பாடி ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மெய்யப்பன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் என்.கே.கே பெரியசாமி தோட்டத்துக்கு அருகில் வந்த ஒரு பைக்கை சோதனையிடுகையில் அதில் ரூ.1.50 லட்சம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் உரிய ஆவணமின்றி பணத்தை வெள்ளி திருப்பூரைச் சேர்ந்த அசோகன்(33) என்பவர் கவுந்தப்பாடியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி எடுத்து வந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பவானி வட்டாட்ச்சியர் முத்துகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். மொடக்குறிச்சி: ஈரோடு - கரூர் செல்லும் சாலையில் பஞ்சலிங்கபுரத்தில் தேர்தல் பறக்கும் படை  அதிகாரிகள் மூர்த்தி மற்றும் சுதாகர், எஸ்.ஐ., உமாபதி ஆகியோர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஈரோட்டிலிருந்து காரில் வந்த ஈரோடு கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்த பரத் (28) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் மொடக்குறிச்சி தாசில்தார் சரவணமூர்த்தியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

சத்தியமங்கலம்:பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜன்நகர் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் மகாலிங்கம் தலைமையில் நேற்று  வாகன தணிக்கை நடந்தது. அப்போது மினிலாரியை தடுத்துநிறுத்தி சோதனை போட்ட போது அதில் வந்த தங்கராஜ் என்ற ஆடு வாங்கி விற்கும் வியாபாரி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1.50 லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உமாசங்கரிடம் பணத்தை ஒப்படைத்தனர்.  இதேபோல் நேற்று புஞ்சைபுளியம்பட்டி - திருப்பூர் சாலையில் கரிவரதராஜ பெருமாள் கோயில் அருகில் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் வாகன தணிக்கை நடைபெற்றபோது புஞ்சை புளியம்பட்டியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் சென்ற பழனிச்சாமி (61) என்பவரிடம் உரிய கணக்குகள் மற்றும் ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து சத்தியமங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: