சென்னை: சுயலாபத்திற்காக தவெகவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று திமுகவில் இணைந்த காங்கிரஸ் இளைஞர் அணிச் செயலாளர் ஸ்ரீநிதி கூறினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் தேசிய இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்றத் தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட்டவருமான ஸ்ரீநிதி மோகன் திமுகவில் இணைந்தார்.
அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த பின்னர் ஸ்ரீநிதி மோகன் அளித்த பேட்டியில், ‘‘கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் இளைஞர்களை முன்னிறுத்த வேண்டும் என்று எங்களுக்கு சீட்டு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருக்க கூடிய உட்கட்சி பூசலால் எங்களால் தொகுதியில் வேலை செய்ய முடியவில்லை. தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய பெண் தலைவர்கள், கொங்கு மண்டலத்திலிருந்து பெண்கள் கட்சியில் முன்னேறக்கூடாது என்று நினைத்தார்கள். ஒரு சிலரின் சுயநலத்திற்காக தவெகவுடன் காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளது. ஒரு மாயையை நோக்கி கவர்ச்சியை நோக்கி இன்று இளைஞர்கள் சென்று கொண்டிருக்கக் கூடிய நிலையில் அவர்களை நல்வழிப்படுத்த திமுக மிகவும் முக்கியம்.
இன்றைய இளைஞர்களின் தேவை திராவிட சித்தாந்தம் தான். பெயரளவில் பெரியாரை வைத்துக்கொண்டு மதசார்பற்ற கூட்டணி என அறிவித்து கொள்கிறார்கள்” என்றார். சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் தவெக ஆதரவு என்ற நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் காங்கிரஸ் முதன்மை உறுப்பினர் மற்றும் தேசிய செயலாளர் பதவிகளை ஸ்ரீநிதி மோகன் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
