பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சொட்டுநீர் பாசனம் மூலம் காய்கறி சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்ததாக மானாவாரி பயிர்களான மக்காசோளம், பருத்தி, நிலக்கடலை, தட்டைபயிர் மற்றும் காய்கறி சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை மற்றும் கோடைமழை காலங்களில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழுது சீர்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.
நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சில நாட்கள் கோடை மழை பெய்ததால் விளை நிலங்களை ஏர் பூட்டியும், டிராக்டர் மூலம் உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தென்மேற்கு பருவ மழையை முன்னிட்டு காய்கறி சாகுபடி செய்ய தயாராகினர்.
ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதையடுத்து சுற்றுவட்டார கிராமங்களான கோபாலபுரம், நடுப்புணி, வளந்தாயமரம், மீனாட்சிபுரம், அம்பராம்பாளையம், வடக்கிபாளையம், சூலக்கல், முத்தூர்,
கோமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில், விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பூசணி, தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடியை சொட்டுநீர் பாசனம் மூலம் தீவிரப்படுத்தி உள்ளனர். தென்மேற்கு பருவமழை பெய்யாததால் சொட்டு நீர் பாசனத்தில் இறங்கியதாகவும், பருவமழை பெய்யும் பட்சத்தில் காய்கறி மற்றும் மானாவாரி பயிர்கள் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
