சென்னை: அதிமுகவில் ஏற்கனவே 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தநிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் எம்எல்ஏ பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாக சபாநாயகரும் அறிவித்தார். அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணி உருவானது. சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது இந்த அணியை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் மனு கொடுத்தது. இதற்கிடையே ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமானார்கள்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் மற்ற 21 எம்எல்ஏக்களும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால் அவர்கள் மீதான நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றார். ஆனாலும், அதிமுகவில் இருந்து தற்ேபாதைய எம்எல்ஏக்கள் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் தொடர்ந்து எடப்பாடி மீது அதிருப்தியிலேயே உள்ளனர். ஒரு சில முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் என பலரும் விலகி தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்து வந்தார்.
இந்த சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் ேநற்று மதியம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏவான அவர் தலைமை செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து, தன் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதம் ஒன்றை வழங்கினார். அப்போது, சட்டசபை செயலாளர் சாந்தியும் உடன் இருந்தார். கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த நிலையில், சி.விஜயபாஸ்கர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர், அதிமுகவில் இருந்து பதவி விலகிய 5வது எம்எல்ஏ ஆவார். இதனால், அதிமுக எம்எல்ஏக்களின் பலம் 47ல் இருந்து 42 ஆக குறைந்துள்ளது.
இதை தொடர்ந்து சபாநாயகர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘சி.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்ற பேரவை விதி 22ன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து விஜயபாஸ்கர் ராஜினாமா கடிதம் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதன்பின்னர் விராலிமலை தொகுதி காலியானது என முறைப்படி அறிவிக்கப்படும். அவரைத் தொடர்ந்து சி.வி.சண்முகம் ஓரிரு நாளில் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். அதை தொடர்ந்து அதிமுகவில் உள்ள கரூர் விஜயபாஸ்கர், ஓசூர் பாலகிருஷ்ணாரெட்டி, ராகேஷ் உள்ளிட்ட சில எம்எல்ஏக்களுக்கு தவெக வலை விரித்துள்ளது.
அதிமுகவில் இருந்து தவெகவில் சேருகிறவர்களுக்கு பெரிய அளவில் சன்மானம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. அதோடு, அமைச்சர் பதவி உறுதிமொழி அளித்துள்ளனர். ஆனால் விஜயபாஸ்கர் மற்றும் சண்முகத்துக்கு மட்டுமே அமைச்சர் பதவி உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குகளில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும், தேர்தல் செலவுக்கு ஏற்ற சன்மானம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கனத்த இதயத்துடனும், கலங்கிய மனதுடனும் விலகுகிறேன்; சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், ஜெயலலிதா என்ற ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்தில் இருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கை பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான். எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும். மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.
ஜெயலலிதா வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன். ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையை சுமந்தபடி என் பயணத்தை தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.
எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கட்சியினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்தில் இருந்து மனவலியோடு விலகுகிறேன். ஒரு கட்சியில் இருந்து அல்ல; நான் விலகுவது என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தில் இருந்து. வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்தில் இருந்து விடைபெற்றாலும்.. என் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்.. தொடர்வேன்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
