குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு; முதல்வர் ஒரு வார்த்தை கூட இதுவரை பேசாதது ஏன்..? கனிமொழி எம்பி கேள்வி

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் முதல்வர் இதுவரைக்கும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசுவதற்கு தயாராக இல்லை என்று கனிமொழி எம்பி குற்றம் சாட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி நேற்று அளித்த பேட்டி:
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது என்று பொய்யான பிரசாரத்தை முன்னிறுத்தியே தவெக ஆட்சிக்கு வந்தது. அப்படிப்பட்டவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மிக முக்கியமாக, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பற்றி, அரசு எந்த கவலையும் அக்கறையும் இல்லாத அளவுக்குதான் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதைவிட மோசமாக, அந்த குற்றத்தை எப்படி மூடி மறைப்பது என்பதற்கான வழிகளைத்தான் இன்று அவர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இன்று, ஒரு குழந்தையின் பிரேதப் பரிசோதனை (ஆட்டோப்சி) நடைபெறும் இடத்திற்கே ஒரு எம்எல்ஏ உள்ளே சென்று, அந்த குழந்தையின் பெற்றோருடன் பேரம் பேசும் அளவுக்கு மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடைய மகளிரணியைச் சேர்ந்த சகோதரி ஒருவர் அந்த நிகழ்வை நேரில் பார்த்திருக்கிறார். எனவே, இப்படிப்பட்ட ஒரு மிக மோசமான சூழலில்தான் தமிழ்நாட்டை கொண்டுபோய் அவர்கள் தள்ளியிருக்கிறார்கள்.

குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. ‘சிங்கப்பெண்’ படை என்று பெயர் மாற்றம் செய்து வழங்கியதைப் பற்றி கூட நாங்கள் பெரிதாகப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? அவங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு தொலைபேசி எண் கூடக் கிடையாது. ஏதேனும் ஒரு குற்றச் சம்பவமோ அல்லது பிரச்னையோ ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்காக மகளிர் ரோந்து வாகனத்தை தொடர்புகொள்வதற்கான வழிவகை கூட இல்லை. இவ்வாறான சூழலில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படி ஒரு சூழலில், முதல்வர் இதுவரைக்கும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட இதைப் பற்றி பேச தயாராக இல்லை.

அப்படியிருக்கும்போது, மக்கள் மீதும், பெண்கள் மீதும், குழந்தைகள் மீதும் இந்த அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகிறது. முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் காவல்துறையை பற்றிக் கூட அவர் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. ஆட்சியாளர்கள் அவர்களுடைய கடமையிலிருந்து தவறுகிறார்கள். தனி மனித ஒழுக்கம் மற்றும் போதைப்பொருள் குறித்து அவர்கள் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால், ஆட்சியாளர்கள் தங்களுடைய அடிப்படை கடமைகளிலிருந்தே தவறி வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: