தவெக ஆட்சியில் இதுவரை 253 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளது பெண்களுக்கான பாதுகாப்பை ஏன் உறுதி செய்ய முடியவில்லை? முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சரமாரி கேள்வி

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகுதி திமுக சார்பில் கலைஞரின் பிறந்த தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. நகர செயலாளர் நரேந்திரன் தலைமை வகித்தார். திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: பெண்களுக்கு பாதுகாப்பில்லை என மாறி மாறி பேசினீங்களே. அதை உங்களால் கட்டுப்படுத்த முடிகிறதா? ஆட்சிக்கு வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. இதுவரை, 3 வயது முதல் மூதாட்டி வரை 253 பாலியல் குற்றம் நடந்துள்ளது. இதில் பெரும்பாலான குற்றவாளிகள் தவெகவினரை சேர்ந்தவர்கள்தான். அதேபோல யார் எம்எல்ஏ, யார் அமைச்சர், அவர்களது பெயர் என்ன என்பதே முதல்வருக்கும் தெரியாது. மக்களுக்கும் தெரியாது.

அதுமட்டுமின்றி சுற்றுலா துறை அமைச்சராக அல்லது சுற்றுச்சூழல் அமைச்சராக என்பதுகூட தெரியாத அமைச்சர்கள் இருக்கிறார்கள். மேலும், நமது தொகுதி எது என்பதே தெரியாமல் வேறு தொகுதிக்கு சென்று நன்றி சொன்ன அமைச்சர்களும் இருக்கிறார்கள். இந்த அரசு என்றைக்கு மகளிர் உதவித்தொகை ரூ.2,500 வழங்குகிறதோ அப்போதுதான் தமிழகத்தில் தவெக அரசு நடப்பதாக ஏற்றுக்கொள்ள முடியும். அதுவரையில் ஸ்டாலின் ஆட்சிதான் என்று கருத வேண்டும். இதுதான் உண்மை. அதிகாரிகள்தான் ஆட்சி செய்கிறார்கள். முதல்வராக ஆதவ்தான் செயல்படுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: