நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

 

நாகப்பட்டினம், ஜூன் 16: நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1000 மனுக்கள் குவிந்தன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 16 நபர்களுக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. இக்குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38 ஆயிரத்து 154 மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.15 ஆயிரத்து 750 மதிப்பில் சக்கர நாற்காலி, 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.34 ஆயிரத்து335 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2 ஆயிரத்து 520 மதிப்பில் பார்வையற்றோருக்கான (ஊன்றுகோல், பிரெய்லி கை கடிகாரம் மற்றும் கண் கண்ணாடி), 5 மாற்றுத்திறனாளிக்கு ரூ.17 ஆயிரத்து 500 மதிப்பில் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான காதொலி கருவி என மொத்தம் 16 நபர்களுக்கு ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 264 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் பிரவீன்குமார் வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பதக்கம், சான்றிதழ் மற்றும் பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், டிஆர்ஓ பவணந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரங்கநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமலிங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கார்த்திகேயன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: