கடுவையாற்றில் 10கிமீ தூரம் பரந்து கிடக்கும் ஆகாயதாமரை

 

நாகப்பட்டினம், ஜூன் 16: நாகப்பட்டினம் அருகே கடுவையாற்றை சூழ்ந்து ஆகாயத்தாமரை புதர்போல் மண்டி கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். காவிரி டெல்டா மாவட்டத்தில் கடைகோடி மாவட்டமான நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.இந்நிலையில் நடப்பு ஆண்டில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் ஒரு போக சாகுபடியாவது நடக்குமா என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கால தாமதமாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் காவிரி நீர் கடைமடை வரை கொண்டு சேர்வதில் பல சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கவே இல்லை. மாவட்டத்தில் கீழ்வேளூர், தேவூர் பகுதிகளில் ஆகாயத்தாமரை செடிகள் புதர்போல், கடுவையாற்றின் படர்ந்துள்ளது. இதனால் நீர்பாசனத்திற்குப் பெரும் தடையாக மாறியுள்ளதால், காலதாமதமாக தண்ணீர் திறந்துவிட்டாலும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடுவையாறு முழுவதும் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரையால் கீழ்வேளூர், தேவூர், ராதாமங்கலம், பட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த காலகட்டத்தை மாவட்ட நிர்வாகம் பயன்படுத்தி கொண்டு கடுவையாறு மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் மண்டி கிடக்கும் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

Related Stories: