வறட்சி நிவாரணத் தொகை தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும்: விவசாய தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

 

சிவகங்கை, ஜூன் 16: பயிர்கள் பாதிப்பால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கும் போது விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டுள்ள மாவட்டமாகும். மொத்தமுள்ள 3 லட்சத்து 70 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலப்பரப்பில் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 1 லட்சத்து 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் மட்டுமே தொடர்ந்து விவசாயம் செய்யப்படுவதாக உள்ளது. கடந்த 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் தலா 78 ஆயிரம் ஹெக்டேரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்ந்து பல ஆணடுகளாக போதிய விளைச்சல் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பெரிய அளவில் வேறு எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லாத இப்பகுதியில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியால் பல ஆண்டுகளாக விவசாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டம் முழுவதும் விவசாயத்தை நம்பி மட்டுமே பல லட்சக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். விவசாய தொழிலாளர்கள் சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளனர். இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருபவர்களாவர். குறைந்தது மாதத்திற்கு 20 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை ஈடுகட்ட முடியும். ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி பாதிப்பிற்கு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு நிவாரணத்தொகை, ரேசனில் கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தின. ஆனால் வறட்சி நிவாரணம் வழங்கலில், விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால் அவர்கள் கடும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த பல ஆணடுகளாக போதிய மழை இல்லாமல் விவசாயம் பாதிக்க தொடங்கிய நிலை தொடர்கிறது. இதனால் விவசாய வேலைகளில் அனுபவம் உள்ளவர்கள் வேலையின்றி கிடைத்த வேலைகளை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வெளி மாவட்டங்களில் பல்வேறு கூலி வேலைகளுக்கு செல்கின்றனர். வறட்சி பாதிப்பின் போது விவசாய தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் வழங்குவதில்லை. இந்நிலையை மாற்றி விவசாய தொழிலாளர்களுக்கும் கட்டாயமாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Related Stories: