திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் முடிவடையும் வகையில் 3 நாட்களுக்கு ஜேஷ்டாபிஷேகம் செய்யப்படுகிறது. ஏழுமலையான் கோயிலில் மிகவும் பழமை வாய்ந்ததாக உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உற்சவர் சிலைகள் பாதிக்கப்படாமல் இருக்க பல ஆண்டுகளாக இந்த உற்சவம் செய்யப்படுகிறது. இதில் முதல் நாளில் உற்சவர் சிலையில் அணிவிக்கப்பட்டுள்ள தங்க கவசம் அகற்றப்பட்டு, யாகம், அபிஷேகம் மற்றும் பஞ்சாமிர்த திருமாஞ்சனம் ஆகியவை செய்யப்படும். அதன்பிறகு, சுவாமிக்கு வைர கவசம் அணிவிக்கப்படுகிறது.
இரண்டாம் நாளில், முத்து கவசம் சமர்ப்பிக்கப்படுகிறது. மூன்றாம் நாளில், திருமஞ்சனம் நிறைவு செய்யப்பட்டு, மீண்டும் தங்க கவசம் சமர்ப்பிக்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜேஷ்டாபிஷேகத்தின்போது இந்த தங்க கவசம் மீண்டும் அகற்றப்படும். அதுவரை ஆண்டு முழுவதும் தங்க கவசம் உற்சவர்களுக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும். ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி ஜூன் 28ம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவ சேவை ஆகியவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
