×

மம்தா கட்சியை தொடர்ந்து உத்தவ் கட்சியிலும் மேலும் ஒரு பிளவா? 5 எம்பிக்கள் பங்கேற்காததால் பரபரப்பு

மும்பை: மம்தா கட்சியை தொடர்ந்து உத்தவ் தலைமையிலான சிவசேனாவில் மேலும் ஒரு பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த கட்சி கூட்டத்தில் 5 எம்பிக்கள் பங்கேற்காதது ெபரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா முதல்வராக இருந்த சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது ஆட்சியை கவிழ்க்கும் வகையில் ஏக்நாத் ஷிண்டே தனி அணியாக பிரிந்தார். அவர் பா.ஜ உதவியுடன் முதல்வரானார். அதனால் சிவசேனா கட்சி இரண்டாக பிரிந்தது. தற்போது வரையும் இணையவில்லை. இந்த நிலையில் மேற்குவங்க தேர்தல் முடிந்ததும் திரிணாமுல் தோல்வி அடைந்ததால் மம்தா கட்சியில் இருந்து 64 எம்எல்ஏக்கள், 19 எம்பிக்கள் தனி அணியாக பிரிந்துவிட்டனர். இந்த சூழலில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சியில் மேலும் ஒரு பிளவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தனது இல்லமான ‘மதோஸ்ரீ’யில் உத்தவ் தாக்கரே கூட்டிய முக்கியமான ஒற்றுமைக்கான கூட்டத்தை, சிவசேனா (உத்தவ்) கட்சியின் 9 மக்களவை எம்.பி.க்களில் 5 பேர் புறக்கணித்ததைத் தொடர்ந்து பெரும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தேஷ்முக், ஓம்ராஜே நிம்பல்கர், பாவ்சாகேப் வக் சௌரே மற்றும் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகர் ஆகிய எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது, கட்சியில் மீண்டும் பிளவு ஏற்படலாம் என்ற ஊகங்களை உடனடியாகத் தூண்டியது. கூட்டத்தில் பங்கேற்காத எம்.பி.க்கள் காணொலி வாயிலாக இணைந்ததாக உத்தவ் தரப்பு உடனடியாகக் கூறினாலும், தாக்கரேயால் நாகேஷ் பாட்டீல் அஷ்டிகருடன் மட்டுமே நேரடியாகப் பேச முடிந்ததாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்காத அந்த ஐந்து எம்.பி.க்களையும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் ‘மதோஸ்ரீ’ இல்லத்திற்கு நேரில் வந்து சந்திக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஒன்றிய அமைச்சருடன் உத்தவ் எம்பி சந்திப்பு
உத்தவ் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காத அவரது கட்சியை சேர்ந்த யவத்மால்-வாஷிம் தொகுதி எம்.பி. சஞ்சய் தேஷ்முக், டெல்லியில் ஏக்நாத் ஷிண்டே அணியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவைச் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Mamata ,Uddhav ,Mumbai ,Shiv Sena ,Chief Minister of ,Maharashtra ,
× RELATED டெல்லி ஏர்போர்ட்டில் வங்கதேசப்...