டெல்லி: வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான். இவர் இந்தியாவில் 2 நாள் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் விளிம்பு கூட்டமைப்பின் மூத்த அதிகாரிகள் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வங்கதேசக் குழுவை வழிநடத்தி வந்தார். டெல்லி ஏர்போர்ட்டில் வங்கதேச குழு நேற்று முன்தினம் மாலை வந்த போது டாக்டர் ஜாஹெட் உர் ரஹ்மான் வழக்கமான பாதுகாப்புச் சோதனையின்போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரது பெயர் கண்காணிப்புப் பட்டியலில் இடம்பெற்றதாகக் கண்டறியப்பட்டதால் குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவருடன் வந்த குழுவின் மற்ற உறுப்பினர்கள் எவ்விதச் சிக்கலுமின்றி குடிவரவுச் சோதனையைக் கடந்து சென்ற நிலையில், ரஹ்மான் மட்டும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வைக்கப்பட்டார்.
இந்தியாவிற்கான வங்கதேச தூதர் எம். ரியாஸ் ஹமிதுல்லா விமான நிலையத்தில் உடனிருந்து, குடிவரவு அதிகாரிகளிடம் ரஹ்மானை அடையாளம் காட்டினார். சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த பிறகு, ரஹ்மான் டாக்காவுக்கே திரும்பிச் செல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் பயணத்தைத் தொடருமாறும் இந்திய அதிகாரிகள் பின்னர் கேட்டுக்கொண்ட போதிலும், அவர் இந்தியாவிற்குள் நுழைய வேண்டாம் என்று முடிவு செய்தார். அவர் கொழும்பு வழியாகத் வங்கதேசத்திற்கு திரும்பினார்.
அவர் சார்க் விசா ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சாதாரண வங்கதேச பாஸ்போர்ட்டை கொண்டே பயணம் செய்தார். அவரிடம் தூதரகக் பாஸ்போர்ட் இல்லாததால், அவர் வழக்கமான குடிவரவுச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியிருந்தது என்று இந்தியா தெரிவித்தது.
இந்திய தூதரக அதிகாரியை அழைத்து வங்கதேசம் கண்டனம்
வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மானின் உதவியாளர் டெல்லி ஏர்போர்ட்டில் 2 மணி நேரத்திற்கும் மேல் காத்திருக்க வைக்கப்பட்டது வங்கதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் துணை உயர் ஆணையர் பவன் பாதேவை வரவழைத்து, நடந்த சம்பவம் குறித்து ஆழ்ந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது.
