சென்னை: பேர்ணாம்பட்டு முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேர்ணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ அ. சின்னசாமி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பேர்ணாம்பட்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அவர், அத்தொகுதி மக்களுக்காகக் குரலெழுப்பிப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், திமுக தோழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
