திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கும் கூட்டம் நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. இதில் பங்கேற்று அமைச்சர் விஸ்வநாதன் பேசுகையில், பொறுப்பு அமைச்சர் என்பது மிகப்பெரிய பொறுப்பு, கடமை கொண்டதாகும். காமராஜர், கக்கனை போன்று காங்கிரஸ்காரர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். லஞ்சம் வாங்காத புதிய அரசியலை உருவாக்கும் வகையில் காங்கிரசார் இருக்க வேண்டும். லஞ்சம் வாங்க கூடாது…. ஊழல் செய்யக்கூடாது… என்று தான் சொன்னேனே தவிர சிபாரிசு செய்யக்கூடாது என்று நான் சொல்லவே மாட்டேன்.
சிபாரிசை புறக்கணிப்பவன் ஜனநாயகத்தில் தலைவனாக இருக்க முடியாது. சிபாரிசு என்பது அங்கீகரிக்கப்பட்ட, எழுதப்பட்ட விதி. இதை யாராலும் மாற்ற முடியாது. மக்களுக்கு உதவி செய்யவே மக்கள் பிரதிநிதிகள். மக்களுக்காக தான் அமைச்சர்கள். மக்கள் தான் தெய்வம். மக்கள் தான் உயர்ந்தவர்கள். மக்களை வழிபடுத்துவது அமைச்சரின் கடமையாகும். அவர்களை புறந்தள்ளி விட்டு இருக்க முடியாது. மக்களை விட ஜனநாயகத்தில் உயர்ந்தவர்கள் யாரும் கிடையாது. எனவே மக்களுக்கான உதவிகளை செய்வது தான் ஒரு அமைச்சரின் கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.
