விழுப்புரம்: தவெக அரசை கண்டித்து 19ம் தேதி நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்எல்ஏ சக்கரபாணி, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் மாவட்ட செயலாளர் பசுபதி அளித்த பேட்டி: தவெகவிற்கு துணை போகும் முன்னாள் அமைச்சர் சி.வி.சிண்முகம், எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவல்களை கூறி வருகிறார். தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாமக போட்ட பிச்சை என்று கூறி அதிமுக தொண்டர்களை இழிவுபடுத்தியிருக்கிறார். அப்படியென்றால் 2019ம் ஆண்டு மக்களவை மற்றும் 2021 சட்டசபை தேர்தலில் பாமகவுடன் கூட்டணியில் இருந்த போதும், விழுப்புரம் தொகுதியில் தோல்வியை அதிமுக பெற்றது ஏன்?.
இபிஎஸ் குடும்ப அரசியல் செய்யவில்லை. ஆனால் சி.வி. சண்முகம் அவரது சகோதரரை வைத்துதான் குடும்ப அரசியல் செய்கிறார். அவர்களை மீறி எடப்பாடி பழனிசாமியை சந்தித்தால் கட்சி பதவியை பறித்து விடுவார்கள். மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 3 தொகுதிகளில் தோல்விக்கு காரணம் சி.வி. சண்முகம்தான். அவர் அதிமுகவை உடைக்க முயற்சித்து வருகிறார். தவெக தூண்டுதலின்பேரில் இது நடைபெற்று வருகிறது. அமைச்சர் பதவி ஆசை வார்த்தை கூறி 25 எம்எல்ஏக்களை தவெகவுக்கு அழைத்துச் சென்ற சண்முகம் வீட்டில் பல கோடி மதிப்புள்ள சோபாவை விஜய் போட்டுவிட்டு சென்றுள்ளார். அக்கட்சியின் கைக்கூலியாகவே சண்முகம் மாறிவிட்டார். மேலும் ஆதவ் ஆர்ஜூனா, சண்முகத்தை கட்சிக்குள்ளே இருந்து அதிமுகவை அழிக்க உத்தரவு போட்டிருக்கிறார். அது ஒருபோதும் நடக்காது. தவெகவின் கனவு ஒருபோதும் பலிக்காது.
அதேபோல் சி.வி சண்முகம், சவுக்கு சங்கரை தூண்டிவிட்டு எடப்பாடி பழனிசாமி குறித்து பேச வைக்கிறார். இதோடு சி.வி.சண்முகம், அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அதிமுகவினரை தவெகவிற்கு அனுப்பி வைப்பதை சி.வி.சண்முகம்தான் செய்து வருகிறார். மயிலம் தொகுதியில் ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட்டால் அவர் டெபாசிட் கூட வாங்க மாட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
