சர்வாதிகார போக்கில் நடப்பதால் சீட்டுக்கட்டு போல் அதிமுக சரிகிறது: எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

திண்டிவனம்: அதிமுகவில் தவெகவுக்கு ஆதரவளித்த 25 எம்எல்ஏக்களில் 23 பேர் மீண்டும் எடப்பாடி பக்கம் சென்றநிலையில் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் மட்டும் தனித்தனியாக உள்ளனர்.

இந்நிலையில் சி.வி.சண்முகம் நேற்று திண்டிவனத்தில் அளித்த பேட்டி:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி, எங்களால் பொதுச்செயலாளர் பதவி ஏற்ற பிறகு இதுவரை தொடர் தோல்வியையே சந்தித்து வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் கட்சியின் வாக்கு சதவீதம் குறைந்து வருகிறது. மக்களின் நன் மதிப்பை இழந்து வருகிறது. கேள்வி கேட்டு தொடங்கப்பட்ட இயக்கம், இன்றைக்கு யாரும் கேள்வி கேட்க கூடாது… பேச கூடாது…. கருத்து சொல்ல கூடாது என்று சர்வாதிகார போக்கில் நடத்தப்பட்ட காரணத்தால், யாருடைய கருத்தையோ, யாருடைய ஆலோசனையையோ நான் கேட்க மாட்டேன்.

ஏற்றுக்கொள்ள மாட்டேன். என் குடும்பத்தாருடைய கருத்தை மட்டும் கேட்பேன். பணம் யார் கொடுப்பார்களோ… பணம் யார் பெற்றுத் தருவார்களோ… அவர்களுடைய கருத்தை தான் கேட்பேன் என்று செயல்பட்ட காரணத்தால், இன்றைக்கு மிகப்பெரிய இழப்பை அதிமுக சந்தித்துக்கொண்டு இருக்கிறது. அதிமுக தலைமை கழகத்தில் இருந்து, அடிப்படை தொண்டன் வரை, அனைவரும் ஏன் தோல்வி அடைந்தோம். எதற்காக தோல்வி அடைந்தோம் என்று உணர்ந்து இருக்கிறார்கள். ஒருவரை தவிர. அந்த ஒருவர் தான் இயக்கத்தை வழி நடத்தக்கூடிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஒரு இயக்கத்திற்கு நம்பிக்கை கொடுக்கக்கூடியவர் யார்? தலைமை தான் இயக்கத்தை வழிநடத்த வேண்டும். அதற்கு மாறாக இன்றைக்கு இந்த இயக்கம், தவறான வழியில் செல்கிறது. அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் கொத்து கொத்தாக விலகிக்கொண்டு இருக்கிறார்கள்.

சீட்டு கட்டு போல் அதிமுக சரிந்து கொண்டு இருக்கிறது. எதுவுமே தெரியாதது போல, பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டுவிட்டதுபோல, சிலர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள.
கட்சிக்காக 50 ஆண்டுகாலம் பாடுபட்டவர்கள், ரத்தம், பணம், குடும்பத்தை பார்க்காமல் செலவு செய்தவர்கள் கோடிக்கணக்காணவர்கள். அவர்கள் இயக்கத்தை விட்டு செல்கிறார்கள் என்றால் அவர்கள் மனநிலை என்ன? அவர்களை பார்த்து சாதாரணமாக சொல்கிறார் துரோகி என்று. இன்னும் தன்னுடைய தவறை உணராமல், குறைபாட்டை உணராமல் மற்றவர்களை குறை சொல்லி கொண்டு, தொடர் தோல்வியை சந்தித்து வருகிறார். இது தோல்வி அல்ல. மக்கள் மத்தியில் அதிமுக புறக்கணிக்கப்பட்டுள்ளது.

குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப் போல, இன்றைக்கு சோசியல் மீடியாவிலே செய்திகளைப் பரப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். நேற்று அவர் கூட்டம் நடத்தியதாகவும், அந்தக் கூட்டத்திலே எல்லாம் ஆரவாரமாக உங்கள் மகனை அரசியலுக்குக் கொண்டு வாருங்கள், அதுல எந்த ஆட்சேபனையுமில்லை. அதுக்கெதற்கு இந்த டிராமா? யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். உங்கள் பிள்ளை வரக் கூடாது என்று நான் சொல்லவில்லை. அவருக்கும் முழு உரிமை உண்டு. நேரடியாக வரட்டும். அரசியலுக்கு வரட்டும், பணியாற்றட்டும், சேவை செய்யட்டும், வளரட்டும். அதுல யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இப்போதும் சொல்றேன், காலம் கையை விட்டுப் போகல. இன்னமும் கொஞ்சம் சொச்சம் மக்கள் நம்ம மீது நம்பிக்கை வெச்சிருக்காங்க.

உங்களுடைய ஈகோவால, சில பேருடைய தவறான வழிகாட்டுதல்ல விட்டு இந்த இயக்கத்தைக் காப்பாற்றுங்கள். எங்களுடைய ஒரே கோரிக்கை, இனியாவது அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் செயற்குழுவையாவது கூட்டுங்கள். இல்லையென்றால், நாங்கள் சில காலம் பொறுப்போம். எங்களுக்கு என்ன வழிமுறைகள் என்று தெரியும். எங்களை அந்த நிலைக்கு நீங்கள் தள்ளாதீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

31 தொகுதி பாமக போட்ட பிச்சை
சி.வி.சண்முகம் கூறுகையில், 47 தொகுதிகளில் அதிமுக வெற்றி என்று எடப்பாடி சொன்னார். வாய்கூசாமல் சொல்கிறார். எப்படி வெற்றி. அதில், 31 தொகுதி பாமக போட்ட பிச்சை. பாமக கூட்டணியில் இல்லை என்றால், வட மாவட்டத்தில் அரியலூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் அதிமுக 7, 8 தொகுதியில் தான் வெற்றி பெற்றிருக்கும். ஏன் எடப்பாடி கூட தட்டுதடுமாறி தான் வெற்றி பெற்றிருப்பார். உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும். சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: