கவனக்குறைவாக சிகிச்சையா? அரசு மருத்துவமனையில் சிசு மரணம்: கண்ணகி நகரில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் கண்ணகி நகர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு வந்த பெண்ணை சரிவர கவனிக்காததால் வயிற்றிலேயே குழந்தை இறந்து பிறந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதை கண்டித்தும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மருத்துவமனை முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை ​கண்ணகி நகரைச் சேர்ந்த மெர்சி (32) என்ற 9 மாத கர்ப்பிணிப் பெண், கடந்த 9ம் தேதி நள்ளிரவு வயிற்று வலி காரணமாக அங்குள்ள சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட கவனக்குறைவான சிகிச்சையை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு பரிசோதித்தபோது குழந்தை வயிற்றிலேயே இறந்தது தெரியவந்தது. தற்போது மெர்சி கோஷா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, மருத்துவமனையின் அலட்சியத்தை கண்டித்து, நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் சிவா, துணை செயலாளர் ஜெயக்குமார், பகுதி துணை செயலாளர்கள் வீரபாண்டியன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட மெர்சியின் மாமியார் ஆரோக்கிய மேரி கூறியதாவது:
வயிற்று வலியால் துடித்த மெர்சிக்கு இங்கு பணியில் இருந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவ ஊழியர் மெர்சியை கையாண்டார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி அனுப்பிய போது குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. கோஷா மருத்துவமனையில் ஸ்கேன் செய்த போதுதான் குழந்தை இறந்தது தெரிய வந்தது என்றார்.

பாதிக்கப்பட்ட மெர்சியின் கணவர் ஸ்டீபன் கூறியதாவது :
எங்களுக்கு பிறந்த முதல் குழந்தையும் இதே மருத்துவமனையின் அலட்சியத்தால்தான் பாதிக்கப்பட்டு இன்னும் சிகிச்சைக்காக போராடி வருகிறோம். இப்போது இரண்டாவது குழந்தையும் இறந்து விட்டது. நாங்கள் மாதம்தோறும் இங்குதான் பரிசோதனைக்காக வருவோம். ஆனால் பாதிப்பு ஏற்பட்ட பிறகு தான் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இங்கு சிசேரியன் செய்வோம் என பொறுப்பற்ற முறையில் கூறுகிறார்கள். புகார் அளித்தும் காவல்துறையினர் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Related Stories: