சென்னை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்ற தவெக எம்எல்ஏ அலுவலக திறப்பு விழாவில் கட்சி நிர்வாகிகளுடன் பவுன்சர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இது, பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. திறப்பு விழா நிகழ்ச்சிக்காக பொன்னேரி ஹரிஹரன் பஜார் வீதியில் சாலையின் ஒரு புறத்தை முற்றிலுமாக மறித்து தடுப்பு கம்பிகளை அமைத்திருந்தனர்.
பொன்னேரியில் ஏற்கனவே பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகள் சிரமத்துடன் சென்று வரும் நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் முக்கிய சாலையில் தடுப்புக் கம்பிகள் அமைத்து மறிக்கப்பட்டதால் ஹரிஹரன் பஜார் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கனரக வாகனங்கள் மட்டும் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக, பேருந்துகள், கார், ஆட்டோக்களில் செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகினர். மேலும் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஏராளமான வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
பொன்னேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ரவியின் புகைப்படம் அச்சிடப்பட்டு இருந்தது. ஆனால் அவரது பெயர் இடம்பெறவில்லை. மேலும் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரின் படம், புகைப்படம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு இருந்தது. கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ விஜயகுமார் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அவரது கட்சி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில்கூட அவரது புகைப்படத்தையும் பெயரையும் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர். காலை 11 மணிக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வருவதாக இருந்தது. ஆனால், மாலை 3.30 மணி ஆகியும் அமைச்சர் ஆனந்த் வரவில்லை.
திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரான குமார் மற்றும் திருவள்ளூர், பொன்னேரி, திருவொற்றியூர், பூந்தமல்லி, ஆவடி, தொகுதி எம்எல்ஏக்கள் மட்டும் வந்து 15 நிமிடத்தில் அலுவலகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். மாலை 4.30 மணிக்கு அமைச்சர் ஆனந்த் வந்தார். அவருடன் மாவட்ட செயலாளர் விஜயகுமார் வந்தார். அலுவலகத்தை திறந்து வைத்த அவர் கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் ரீல்ஸ் பதிவிடுவதற்காக அமைச்சர் புஸ்ஸி ஆனந்துடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவர் புறப்பட்டபோது கட்சி நிர்வாகிகள் முண்டியடித்ததால் வெளியே வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர் கம்பம் விழுந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. அங்கிருந்த சிறுவன் உள்பட இருவர் நூலிழையில் காயமின்றி உயிர் தப்பினர்.
இந்த திறப்பு விழா காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், மாலை 4.30 மணிக்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வந்து எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்தார். இதன் காரணமாக பல மணி நேரமாக காத்திருந்த கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்தனர். இதனிடையே அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன், எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி நிர்வாகி ஒருவர் செல்ல முயன்றபோது பவுன்சர்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பவுன்சர்கள் கட்சி நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட கட்சி நிர்வாகியை சக கட்சியினர் அங்கிருந்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். கட்சியின் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகளுக்கும் பவுன்சர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் பல்வேறு இடங்களில் மாவட்ட நிர்வாகிகளுக்குள் தவெகவில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது. மாவட்ட செயலாளர் பெயரையும் அதேபோல் பொன்னேரி தொகுதி எம்எல்ஏ பெயரையும் பேனரில் புறக்கணித்துள்ளதால் அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த மோதல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மத்தியில் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள பிளவை அம்பலப்படுத்துவதாக அமைந்துள்ளது. இதற்கிடையே, சாலை ஓரங்களில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை வியாபாரம் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
