சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: பாஜ மாநில செயலாளர் கராத்தே ஆர்.தியாகராஜன் வெளியிட்ட அறிக்கை:
பெருநகர சென்னை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டு 22 சட்டமன்ற தொகுதிகளும், 200 கவுன்சிலர் வார்டுகளும் உள்ளன. மிக பரந்து விரிந்து கிடக்கிறது சென்னை மாநகராட்சியின் எல்லை. அதனால், இதை நிர்வகிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது நிர்வாகம். இவ்வளவு பெரிய மாநகராட்சியை ஒரு மேயரால் நிர்வகிக்க முடியவில்லை. நிர்வாக வசதிகளுக்காக மாவட்டங்கள் பிரிக்கப்படுவது போல, பெருநகர சென்னை மாநகராட்சியையும் பிரிக்க வேண்டும்.

அந்த வகையில், தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை என 3 மாநகராட்சிகளாக பிரிக்கும் நடவடிக்கைகளை அதேபோல, ஒரு கவுன்சிலர் வட்டத்தில் அதிகபட்சம் 10,000 வாக்குகள் இருப்பது போல சீரமைக்க வேண்டும். சென்னை மாநகராட்சி 3 ஆக பிரிக்கப்படுவதன் மூலம் ஒரு மாநகராட்சிக்கு 1 மேயர், 1 டெபுடி மேயர், 10 மண்டல தலைவர்கள், 6 நிலைக்குழு தலைவர்கள் கிடைப்பார்கள். ஒரு மாநகராட்சிக்கு குறைந்தது 100 கவுன்சிலர் வட்டங்கள் கிடைக்கும்.

இதன் மூலம் மாநகராட்சியை நிர்வகிப்பது எளிமையாக மாறுவதுடன் சென்னை மக்களுக்கான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்கும். உள்கட்டமைப்பு வசதிகளும் வளர்ச்சி அடையும். நிர்வாகம் செய்வதும் எளிதாகும். அரசியல் ரீதியாக நிறைய பேருக்கு பதவிகள் கிடைக்கும். வளர்ச்சியினால் அரசுக்கும் நல்ல பெயர் கிடைக்கும். எனவே, தமிழக முதல்வர் விஜய், சென்னையை 3 மாநகராட்சிகளாக பிரிப்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

Related Stories: