சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளி மாணவர்களின் விளையாட்டு திறனை முடக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் சுமார் 250 மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் என்றிருந்த விகிதத்தை, 700 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என மாற்றுமாறு, தவெக அரசும் முன்மொழிவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அரசு குறைக்க நினைப்பது அப்பட்டமான அடக்குமுறை.
தவெக அரசின் இந்த தவறான அணுகுமுறையால், 700 மாணவர்களுக்கு கீழ் இருக்கும் சில கிராமப்புற பள்ளிகளின் மீது உடற்கல்வி ஆசிரியரின் நிழல் கூட படாமல் போய்விடும் என்பது எவ்வளவு பெரிய உரிமை மீறல்? இதுதான் தவெகவின் அனைவருக்குமான அரசியலா?. கல்விக் கூடங்களில் மாணவர்களின் ஒழுக்கத்தை கண்காணிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையில் அரசு சமரசம் செய்யக்கூடாது எனவும், பழைய நடைமுறையின் படியே உடற்கல்வி ஆசிரியர்களின் நியமனம் தொடர வேண்டும் எனவும் முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
