தென் மாவட்டங்களில் தொடரும் ஆணவப்படுகொலைகள் கே.என். பாஷா ஆணையத்தின் அறிக்கையை பெற்று சட்டம் இயற்றவேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் குறிப்பாக, தென்மாவட்டங்களில் தொடர்ந்து ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. இத்தகைய சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுப்பதற்கு ஏதுவாக ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

இந்தியாவிலேயே முதன்முறையாக 2019ம் ஆண்டு, ராஜஸ்தான் அரசு ஆணவக் கொலைகளுக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்றியது. அடுத்து, கர்நாடகாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஆணவக் கொலைகளுக்கு எதிராக ‘கவுரவம் மற்றும் பாரம்பரியம் சார்ந்த வன்முறை தடுப்புச் சட்டம்-2026 நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த நவம்பர் மாதம் திமுக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதன் அறிக்கை இன்னும் அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு நெல்லையில் மென்பொறியாளர் கவின் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதற்கென ஒரு சட்டத்தை இயற்றிட வேண்டுமென தவெக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போதைய தவெக அரசு ‘கேஎன் பாஷா ஆணையத்தின்’ பரிந்துரைகளைப் பெற்று ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: