புற்றுநோயாளிகளின் உயிரை காக்கும் கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க நடவடிக்கை: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சையில் பரவலாக பயன்படுத்தப்படும் முக்கிய கீமோதெரபி மருந்துகளான சிஸ்பிளாட்டின் மற்றும் கார்போபிளாட்டின் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது கவலைக்குரிய ஒன்றாகும். இந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விலை உயர்விற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியிருப்பது, மருந்து தட்டுப்பாடு என்பது உண்மையான பிரச்னை என்பதை அரசே ஒப்புக்கொண்டிருப்பதை காட்டுகிறது. மருந்துகளின் தரத்தை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைப்பது அவசியம்.

ஆனால், அதே நேரத்தில், புற்றுநோய் சிகிச்சை பெற்று வரும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க நோயாளிகளின் வாழ்வாதாரத்தையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். புற்றுநோய் என்பது ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தையும் மனநிலையையும் கடுமையாக பாதிக்கும் நோயாகும். மருந்து உற்பத்தியாளர்களின் நலனும் முக்கியம். அதே அளவில் நோயாளிகளின் உயிரும் முக்கியம். எனவே மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் கொள்கைகளுடன், ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சை பாதிக்கப்படாத வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மருந்து உற்பத்தி வளர வேண்டும். அதே நேரத்தில் நோயாளியின் உயிர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இன்றைய காலத்தின் அவசர தேவையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: